விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டி - இந்திய பவுலிங் நிலை என்ன ?

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டி - இந்திய பவுலிங் நிலை என்ன ?

webteam

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இறுதி மற்றும் 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா இன்று விளையாடவுள்ளது.

முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில், ஒன்றில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், மற்றொன்றில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று ஒடிஷாவில் நடைபெறும் இறுதிப் போட்டியில் வெற்றி பெறவேண்டும் என இரண்டு அணிகளும் முனைப்புடன் உள்ளன.

முன்னதாக, முதல் போட்டியில் இந்திய அணி 287 ரன்கள் குவித்தபோதிலும், வெஸ்ட் இண்டீஸ் அணி எளிதாக இலக்கை எட்டியது. இதற்கு இந்திய அணியின் பவுலிங்கின் பலவீனமே காரணம் எனக் கூறப்பட்டது. புவனேஸ்குமார் மற்றும் பும்ரா இல்லாததால் இந்திய அணி தடுமாறுவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி 387 ரன்கள் குவித்தது.

இரண்டாவதாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 280 ரன்கள் சேர்த்து தோல்வியடைந்தது. இருந்தாலும் அந்த அணி 280 ரன்கள் வரையிலும் குவித்தது, மீண்டும் இந்திய பவுலிங் விமர்சனத்திற்குள்ளாகியது. ஏனென்றால் அடுத்த போட்டியில் இந்தியா எப்படியும் 280 ரன்களில் சுருண்டுவிட்டால், வெற்றி பெறுவது கடினம் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே இந்திய அணியை சரிவில் இருந்து மீட்கும் வகையில் பந்துவீசி வந்த தீபக் சாஹரும் காயம் ஏற்பட்டு அணியிலிருந்து விலகினார். இதனால் இந்திய அணியின் பந்துவீச்சு கேள்விக்குறியாகி உள்ளது.

இதையடுத்து தீபக் சாஹருக்கு பதிலாக அணியில் நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளார். சைனி அதிவேகமாக பந்துவீசக்கூடியவர் என்றாலும், இதுவரை அவர் ஒருநாள் போட்டிகளில் விளையாடியதில்லை. எனவே அவரது பந்துவீச்சு எப்படி இருக்கும் என்பதை இன்றைய களத்தில்தான் பார்க்கமுடியும்.