விளையாட்டு

நெருங்கிய உலகக் கோப்பை - சொந்த மண்ணில் தோற்ற இந்திய அணி

நெருங்கிய உலகக் கோப்பை - சொந்த மண்ணில் தோற்ற இந்திய அணி

rajakannan

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியை ஆஸ்திரேலிய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. தொடரை யார் வெல்வார்கள் என்பதை தீர்மானிக்கு இறுதிப் போட்டி இன்று டெல்லியில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்தது. கவாஜா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.

கவாஜா களத்தில் இருக்கும் வரை ஆஸ்திரேலிய அணி 350 ரன்களை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பின் வரிசையில் உள்ள வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் 300 ரன்களுக்குள்ளாக கட்டுப்படுத்தப்பட்டது. இந்திய அணி தரப்பில் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்கள் சாய்த்தார். ஷமி, ஜடேஜா தலா இரண்டு விக்கெட் எடுத்தனர். 

இதனையடுத்து, 273 ரன்கள் என்ற இலக்குட விளையாடிய இந்திய அணியில் ஷிகர் தவான் 12 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். ரோகித் - விராட் கோலி ஜோடி சிறிது நேரம் நிலைத்து நின்றது. இருப்பினும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் விராட் கோலி 20 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

அந்த நேரத்தில் தான் மிடில் ஆர்டர் சொதப்பல் மீண்டும் தொடங்கியது. பண்ட், விஜய் சங்கர் தலா 16 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடி அரைசதம் அடித்த ரோகித் சர்மா 56(89) ரன்னில் நடையை கட்டினார். ஜடேஜா வந்த வேகத்தில் டக் அவுட் ஆனார். இந்திய அணி 132 ரன்களுக்குள் 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதனால், இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடையும் என்ற நிலை உருவானது. ஏனெனில் களத்தில் ஒரு பேட்ஸ்மேனாக கேதர் ஜாதவ் மட்டுமே இருந்தார். 

ஆனால், கேதர் உடன் புவனேஸ்வர் குமார் ஜோடி சேர்ந்து மெல்ல மெல்ல இந்திய அணியின் ரன்னை உயர்த்தினார். இருவரும் நிதானமாக விளையாடி விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். 150, 180, 200 என மெல்ல இந்திய அணி வெற்றியை நோக்கி முன்னேறியது. ஒரு கட்டத்தில் 5 ஓவர்களுக்கு 59 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. கேதர் - புவனேஸ்வர் ஜோடி ஆஸ்திரேலிய அணிக்கு தலைவலியை உண்டாக்கியது.

இருப்பினும் புவனேஸ்வர் 46(54), கேதர் 44(57) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதனால் இந்திய அணியின் தோல்வி உறுதியானது. இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 237 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், ஆஸ்திரேலிய அணி 35 ரன்கள் வித்தியாத்தில் இந்தியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரையும் 3-2 என்ற கணக்கில் வென்றது. சதம் அடித்த கவாஜா ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதினை தட்டிச் சென்றார்.

ஏற்கனவே டி20 தொடரை இழந்து இருந்த நிலையில், ஒருநாள் தொடரையும் தற்போது இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. உலகக் கோப்பைக்கு முன் நடைபெற்ற தொடரை இந்திய அணி இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது/ 2009ம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவில் ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரை வென்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகள் இந்திய அணி இழந்துள்ள 4வது ஒருநாள் தொடர் இது ஆகும்.