விளையாட்டு

டி20 உலகக் கோப்பை அடுத்தாண்டுக்கு ஒத்திவைப்பு ? - ஐசிசி ஆலோசனை

டி20 உலகக் கோப்பை அடுத்தாண்டுக்கு ஒத்திவைப்பு ? - ஐசிசி ஆலோசனை

jagadeesh

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக இந்தாண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை போட்டிகளை அடுத்தாண்டுக்கு ஒத்தி வைக்க ஐசிசி நிர்வாகக் குழு ஆலோசனை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரை இருபது ஓவர் உலகக்கோப்பை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக, உலகளவில் விளையாட்டு தொடர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், நடப்பு ஆண்டு இருபது ஓவர் உலகக் கோப்பை தொடர் நடைபெறுமா எனச் சந்தேகம் எழுந்துள்ளது.

உலகக் கோப்பை தொடர் தொடங்க பல மாதங்கள் உள்ளதால், அதை ரத்து செய்வதை அல்லது ஒத்தி வைப்பதைக் குறித்து ஆலோசிக்கப்படவில்லை என உலகக்கோப்பையின் தலைமை செயல் அதிகாரி நிக் ஹாக்லே தெரிவித்திருந்தார். இருபது ஓவர் உலகக்கோப்பை ரத்து செய்யப்பட்டால், அந்தக் காலகட்டத்தில் ஐ.பி.எல். தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பையைத் திட்டமிட்டபடி நடத்தலாமா அல்லது அடுத்தாண்டு வரை ஒத்திவைக்கலாமா என்பது குறித்து ஐசிசி நிர்வாகக் குழு மே 28 ஆம் தேதி கூடி ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுக்க இருக்கிறது. இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள ஐசிசி நிர்வாகக் குழு உறுப்பினர் ஒருவர் "கூட்டத்தின் போது மூன்று முக்கிய விஷயங்களை விவாதிப்போம். முதலில் திட்டமிட்டபடி போட்டித் தொடரை நடத்துவது, இரண்டாவது ரசிகர்களை மைதானத்தில் அனுமதிப்பது, மூன்றாவது ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்துவது" என்று கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்த அவர் இதில் கடைசிக் கட்டமாக "உலகக் கோப்பை போட்டியை அடுத்தாண்டில் நடத்துவது. போட்டியை நடத்தவில்லை என்றால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கடுமையான நஷ்டத்தைச் சந்திக்கும். எனினும் மே 28 ஆம் தேதி ஐசிசி ஆலோசனைக் கூட்டத்தில் இது தொடர்பான விஷயங்கள் பேசப்படும்" என்றார் அவர்.