விளையாட்டு

ஐசிசி இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்து அளித்திருக்க வேண்டும் - நியூ. பயிற்சியாளர்

ஐசிசி இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்து அளித்திருக்க வேண்டும் - நியூ. பயிற்சியாளர்

rajakannan

உலகக் கோப்பையை இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு பகிர்ந்து அளித்திருக்க வேண்டும் என்று நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் காரி ஸ்டீட் கூறியுள்ளார்.

லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டன. இதுவரை பார்த்திராத அளவிற்கு இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டி அவ்வளவு பரபரப்பாக நடைபெற்றது. போட்டி சமனில் முடிந்து சூப்பர் ஓவர் வரை சென்றது. அத்துடன் முடியாமல், இருவரும் தலா 15 ரன்கள் அடிக்க சூப்பர் ஓவரும் டையில் முடிவடைந்தது. ஐசிசி விதிகளில் அதிக  பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து அணி கோப்பையை வென்றதாக அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து முதன்முறையாக கோப்பையை வென்றது.

அதனையடுத்து, அதிக பவுண்டரிகளின் அடிப்படையில் கோப்பை இங்கிலாந்து அணிக்கு வழங்கப்பட்டது குறித்து முன்னாள் மற்றும் இந்நாள் வீரரகள் பலரும் விமர்சனம் செய்திருந்தனர். ரசிகர்கள் பலரும் ஐசிசியின் விதிக்கு எதிராக தொடர்ச்சியாக விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். 

இந்நிலையில், போட்டி சமனில் முடிவடைந்த பட்சத்தில் இரு அணிகளுக்கும் கோப்பையை ஐசிசி பகிர்ந்தளித்திருக்க வேண்டும் என்று நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டீட் கூறியுள்ளார். ஈஎஸ்பிஎன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். சூப்பர் ஓவர் விதிகள் மட்டுமின்றி இன்னும் பல விஷயங்களை ஆய்வு செய்து மாற்ற வேண்டியுள்ளதாக அவர் கூறினார்.