கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து முடிவு எடுத்தபோது தன்னுடைய மனநிலை எப்படி இருந்தது என முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்
யுவராஜ் சிங் கடந்த வருடம் தன்னுடைய ஓய்வை அறிவித்தார். தான் ஏன் ஓய்வை அறிவித்தேன் என்றும், அப்போது தன் மனநிலை எப்படி இருந்தது என்றும் யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர்,வாழ்க்கை வேகமாக ஓடிக்கொண்டு இருக்கும் பொழுது பல விஷயங்களை நாம் நினைத்துப் பார்ப்பதில்லை. திடீரென ஒருநாள் இங்கு என்ன நடக்கிறது என்று தோன்றும். பல காரணங்களுக்காக நான் 2-3 மாதங்கள் வீட்டுக்குள்ளே இருந்தேன். ஒருகட்டத்தில் கிரிக்கெட் எனக்கு மனதளவில் உதவியாக இருக்காது என்பதை உணர்ந்தேன். எனக்கு எப்போதும் கிரிக்கெட் விளையாட வேண்டும். ஆனால் மனதளவில் அது உதவவில்லை.
அடுத்து ஓய்வு பெறும் நிலைக்கு என்னை இழுத்து வந்தேன். ஓய்வு பெறலாமா? இல்லை வேண்டாமா? இல்லை வேறொரு சீசனில் விளையாட வேண்டுமா? என யோசித்தேன். நான் எப்போதாவது கிரிக்கெட்டை மிஸ் செய்வேன். ஆனால் அதிக வருடம் நான் கிரிக்கெட்டோடு இருந்து விட்டதால் அடிக்கடி மிஸ் செய்வதில்லை. ரசிகர்களும், அவர்களும் அன்பும் நான் ஆசீர்வதிக்கப்பட்டவன் என உணர வைக்கிறது. எல்லாவற்றையும் விட கிரிக்கெட் எனக்கு நல்ல மதிப்பைக் கொடுத்தது.
மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதேபுள்ளியில் நான் விடைபெற விரும்பினேன். ஓய்வுபெற்ற நாளானது நான் சுதந்திரமாக உணர்ந்தேன். ஆனால் அது மிகவும் உணர்ச்சிகரமான நாள். அதை என்னால் வார்த்தைகளால் விளக்கமுடியாது. அதன்பின் மனதளவில் மகிழ்ச்சியை உணர்ந்தேன்.நான் நீண்ட வருடங்களாக சரியாக உறங்கவில்லை. அதன் பின் நன்றாக தூங்க முயற்சி செய்தேன் என தெரிவித்துள்ளார்