விளையாட்டு

'ஏன் டைவ் அடிக்கவில்லை என நான் எனக்குள் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்' - தோனி

'ஏன் டைவ் அடிக்கவில்லை என நான் எனக்குள் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்' - தோனி

webteam

உலகக்கோப்பை அரையிறுதியில் டைவ் அடித்திருக்க வேண்டுமென எனக்குள் நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் என தோனி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது

உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 239 ரன்கள் எடுத்தது. 240 ரன்கள் என்ற இலக்கை நோக்கிய விளையடிய இந்திய அணி ஆரம்பம் முதல் தடுமாறியது. இந்தத் தடுமாற்றத்தை தாங்கி பிடித்தனர் தோனியும், ஜடேஜாவும்.

இந்த ஜோடி 100 ரன்களுக்கு மேல் குவித்து நம்பிக்கையை அதிகரித்தது. ஆனால் ஜடேஜா 77 ரன்களில் 48வது ஓவரில் ஆட்டமிழக்க, இந்திய அணியின் ஒட்டுமொத்த ஒரே நம்பிக்கையாக தோனி களத்தில் இருந்தார். 49வது ஓவரில் முதல் பந்திலே தோனி சிக்ஸர் அடிக்க இந்திய ரசிகர்களின் நம்பிக்கை அதிகரித்தது. மூன்றாவது பந்தில் இரண்டாவது ரன் ஓட முற்பட்ட போது குப்திலின் அற்புதமான த்ரோவால் நூலிழையில் ரன் அவுட் ஆனார் தோனி. அதனால் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் அதிர்ச்சியில் மூழ்கினர்.

இந்திய அணியின் ஒரே நம்பிக்கையும் நூலிழை ரன் அவுட்டில் தகர்ந்துபோனது. கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத ரன் அவுட்டாக அது அமைந்தது. இந்திய அணியின் உலகக் கோப்பை கனவு சில நூலிழையில் கலைந்துபோனது. இந்த ரன் அவுட் குறித்து ‘இந்தியா டுடே’ பத்திரிகையாளரிடம் தோனி மனம் திறந்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளியான தகவலின்படி, ''அப்போது நான் ஏன் டைவ் அடிக்கவில்லை என்று என்னிடம் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். அந்த இரண்டு இஞ்ச் தூரத்தை நீ டைவ் அடித்திருக்க வேண்டுமென எனக்குள் நான் சொல்லிக்கொண்டே இருக்கிறேன்’ என தோனி தெரிவித்ததாக கூறப்படுகிறது.