எனக்கு "கேரம்பால்" பவுலிங் முறையை சொல்லிக்கொடுத்தவரை நான் இப்போது வரை தேடிக்கொண்டிருக்கிறேன் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
"கிரிக்பஸ்" இணையதளத்துக்கு பேட்டியளித்துள்ள அஸ்வின் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார், அதில் "முதன்முறையாக டென்னிஸ் பால் கிரிக்கெட் விளையாட சென்றேன். அங்கே ஒரு நபர் மிகவும் நேர்த்தியான பவுலிங் ஆக்ஷனுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அவர் மிக சிறப்பாக பந்து வீசினார், அவரால் பந்தை அவ்வளவு பிரமாதமாக ஸ்பின் செய்ய முடிந்தது. பேட்ஸ்மேன்கள் திணறிப் போனார்கள். நான் அதுபோல ஒரு சிறந்த பந்துவீச்சை எதிர்கொண்டு இதுவரை விளையாடியதில்லை. அவரின் பெயர் எஸ்கே. நான் அவரிடம் இருந்துதான் கேரம்பால் பந்துவீச்சு முறையை தெரிந்துக்கொண்டேன்" எனக் கூறியுள்ளார்.
மேலும் தொடர்ந்த அஸ்வின் "நான் டென்னிஸ் பால் கிரிக்கெட்டில் பெரிய பேட்ஸ்மேன். ஆனால் அந்த நபர் தன் பந்துவீச்சால் என்ன திக்குமுக்காட வைத்தார். அப்போதுதான் முடிவு செய்தேன் இவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். இதனையடுத்து தொடர்ந்து 15 நாள் காலை மைதானத்துக்கு சென்று எஸ்கேவிடம் கேரம்பால் முறையை கற்றுக்கொண்டேன். அதன் பின் என்னால் அவரைப் பார்க்க முடியவில்லை, அவரைத் தேடிக்கொண்டு இருக்கிறேன்" என்றார்.