விளையாட்டு

“என் ஓய்வு முடிவை மாற்றியவர் விவியன் ரிச்சர்டு”- மனம் திறந்த சச்சின்

“என் ஓய்வு முடிவை மாற்றியவர் விவியன் ரிச்சர்டு”- மனம் திறந்த சச்சின்

webteam

விவியன் ரிச்சர்ட்டின் அறிவுரையால் தன் ஓய்வு முடிவை மாற்றிக்கொண்டதாக சச்சின் டெண்டுல்கர் மனம் திறந்துள்ளார்.

கிரிக்கெட் உலகின் கடவுள் என அழைக்கப்படுபவர் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். ஓய்விற்குப் பிறகு பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் சச்சின். அந்தவகையில் நேற்று சச்சின் ‘இந்தியா டுடே’ சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அந்த நிகழ்வில் தனது ஓய்வு குறித்து சச்சின் மனம் திறந்தார். 

அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய சச்சின், “2007ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர்தான் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் மோசமான தருணம். அந்தாண்டு உலகக் கோப்பை முடிந்தவுடன் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிந்தது என நினைத்தேன். அப்போது என் சகோதரர் அஜித் 2011ஆம் ஆண்டு மும்பையில் உலகக் கோப்பையை உன் கையில் வைத்திருந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் எனக் கூறி என சமாதானம் செய்தார். 

அதன்பிறகு எனக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. அதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் விவியன் ரிச்சர்டு பேசினார். அவர் என்னிடம் இன்னும் நிறைய கிரிக்கெட்டிற்கான திறமை மீதம் இருப்பதாக கூறினார். எனது பேட்டிங் ஹீரோவான ரிச்சர்டு என்னை தொலைப்பேசியில் அழைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. இதன்பின்னர் எனது வாழ்க்கை மாற தொடங்கியது. நான் மீண்டும் நன்றாக விளையாட ஆரம்பித்தேன்” எனத் தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியில் விவியன் ரிச்சர்டு கலந்துக் கொண்டிருந்தார். சச்சினை அடுத்து பேசிய அவர், “எப்போதும் எனக்கு இந்தப் லிட்டில் வீரர் மீது நம்பிக்கை இருந்தது. நான் விளையாடிய காலத்தில் கவாஸ்கர் என்னுடன் விளையாடினார். அப்போது அவர் தான் இந்திய பேட்டிங்கின் காட் பாதர் என நினைத்தேன். ஆனால் அவரைத் தொடர்ந்து சச்சின் மற்றும் தற்போது விராட் கோலி ஆகியோர் வந்துவிட்டனர். இவர்களில் என்னை எப்போதுமே வியக்கவைத்தவர் சச்சின்தான்” என்று கூறினார்.

2007ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளிடம் தோற்று முதல் சுற்றுடன் வெளியேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.