விளையாட்டு

உலகக்கோப்பை ஹாக்கி: முதன் முறையாக சாம்பியன் ஆனது பெல்ஜியம்

உலகக்கோப்பை ஹாக்கி: முதன் முறையாக சாம்பியன் ஆனது பெல்ஜியம்

webteam

உலகக்கோப்பை ஹாக்கிப் போட்டியில் பெல்ஜியம் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 

பதினான்காவது உலக கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்து வந்தது. நேற்றிரவு நடந்த இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் நெதர்லாந்து அணி, பெல்ஜியத்தை சந்தித்தது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் வழக்கமான நேரத்தில் இரு அணிகளும் கோல் போடவில்லை. இதையடுத்து பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் நெதர்லாந்து, தங்களது 5 வாய்ப்பில் 2-ஐ மட்டுமே கோலாக்கியது. பெல்ஜியம் அணி தங்களது முதல் 4 வாய்ப்பில் 2-ஐ கோலாக்கிய நிலையில், கடைசி வாய்ப்பை ஆர்தர் டி ஸ்லூவர் கோலாக மாற்றினார். இதையடுத்து வெற்றிபெற்றுவிட்டதாக நினைத்து மகிழ்ச்சியோடு திரும்பினர். ஆனால் நெதர்லாந்து தரப்பில், அது சரியான கோல் அல்ல என்று அப்பீல் செய்யப்பட்டது. 

டி.வி. ரீப்ளேயில் ஆர்தரின் காலில் பந்து லேசாக பட்ட பிறகே வலைக்குள் செல்வது தெரியவந்தது. இதனால் அந்த கோல் நிராகரிக்கப்பட்டது. இதனால் 2-2 என்ற கணக்கில் சமநிலை நீடித்தது. இதனால் மேடைக்கு சென்ற பெல்ஜியம் அணி மீண்டும் களத்துக்கு வந்தது.

இதைத் தொடர்ந்து ‘சடன்டெத்’ முறை கடைபிடிக்கப்பட்டது. இதன் முதல் வாய்ப்பை பெல்ஜியம் வீரர் புளோரென்ட் வான் ஆபெல் கோலாக்கினார். பின்னர் நெதர்லாந்து வீரர் ஜெரோன் ஹட்ஸ்பெர்கர் பந்துடன் இலக்கை நோக்கி முன்னேறிய போது அவரது முயற்சியை, பெல்ஜியம் கோல் கீப்பர் முறியடித்து வெற்றியை உறுதி செய்தார்.

பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் பெல்ஜியம் அணி 3-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை தோற்கடித்து, உலக கோப்பையை வென்றது. 47 ஆண்டு கால உலக கோப்பை ஹாக்கி வரலாற்றில் பெல்ஜியம் அணி சாம்பியன் கோப்பையை வெல்வது இதுவே முதல்முறை.