விளையாட்டு

“தமிழகத்தில் 'Dream11' செயலி இனி இயங்காது” தமிழக அரசின் தடையை அடுத்து நிறுவனம் அறிவிப்பு!

“தமிழகத்தில் 'Dream11' செயலி இனி இயங்காது” தமிழக அரசின் தடையை அடுத்து நிறுவனம் அறிவிப்பு!

EllusamyKarthik

பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் ட்ரீம்11 ஆன்லைன் விளையாட்டிற்கும் தடை அமலுக்கு வந்துள்ளது.

ஆன்லைன் சூதாட்டங்களினால் தமிழகத்தில் கடந்த காலங்களில் நிதி நெருக்கடிக்கு ஆளாகியதன் காரணமாக பலர் தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொண்டனர். அதனையடுத்து, தமிழக அரசு மேற்கொண்ட ஆன்லைன் விளையாட்டு (கேமிங்) தொடர்பான சட்ட திருத்தத்தின் படி பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி சில ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் தமிழகத்தில் பணம் கட்டி விளையாட தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. 

“தமிழக மாநிலத்தில் மாநில விளையாட்டுச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றத்தினால் தமிழகத்தில் குடியிருப்பவர்கள் போட்டிகளில் விளையாடுவதற்கு பணம் செலுத்த முடியாது என்பதை நாங்கள் தெளிவுபடுத்திக் கொள்கிறோம்” என DREAM11 நிறுவனம் அறிவித்துள்ளது. 

முன்னதாக, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் சட்டமுன்வடிவை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் அறிமுகம் செய்தார். தடையை மீறி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், 6 மாத சிறை தண்டனை வழங்கவும், அரங்கம் வைத்து ஆன்லைன் சூதாட்டம் நடத்தினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், 2 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும் என சட்டத்தில வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா குரல் வாகெடுப்பு மூலமாக நிறைவேற்றினார். இதனால், பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.