விளையாட்டு

“புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” - ஹர்த்திக் பாண்டியா

“புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” - ஹர்த்திக் பாண்டியா

webteam

தனது தவறை உணர்ந்து ஹர்த்திக் பாண்டியா அவரது இன்ஸ்டாகிராமில் பகீரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். 

பாலிவுட் நட்சத்திரம் கரண் ஜோஹர், தனியார் சேனல் ஒன்றில் நடத்தும் `காஃபி வித் கரண்’ நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அதில், விளையாட்டு, சினிமா எனப் பல்துறை சார்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டு தங்களின் கருத்துகளை வெளிப்படையாக கூறும் விதமாக இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. 

கடந்த வாரம் வழக்கம் போல இந்நிகழ்ச்சிக்கு இந்திய கிரிக்கெட் வீரர்களான கே.எல்.ராகுல் மற்றும் பாண்ட்யா ஆகிய இருவரும் அழைக்கப்பட்டிருந்தனர். இந்த இருவரும் கலந்துகொண்டு தங்களின் துறை சார்ந்த கிரிக்கெட் பற்றி பேசினர். மேலும் சொந்த விஷயங்கள் குறித்தும் பல்வேறு தகவல்களை இருவரும் பகிர்ந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியின் போது கேள்வி ஒன்றுக்கு விராட் கோலி குறித்து பதிலளித்த கே.எல்.ராகுல், “விராட் கோலி கொஞ்சம் அமைதியாக வேண்டும் என்பது எனது கருத்து. அவர் ரெஸ்ட் எடுப்பதே இல்லை. இதை நான் அவரிடம் அடிக்கடி கூறி இருக்கிறேன். எந்நேரமும் வேலை வேலை என்று கோலி மும்முரமாக இருக்கிறார். அவர் விரும்புவதும் அதைதான்’என்று கூறினார். 

நிகழ்ச்சியின் போது ஒப்பீட்டளவில் சச்சின் சிறந்தவரா? கோலி சிறந்தவரா? என்ற கேள்வி இருவரிடமும் முன் வைக்கப்பட்டது. அதற்கு இருவருமே சச்சினைவிட விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன் என்று கருத்து கூறினர். இந்தப் பதில் சச்சின் ரசிகர்களை கடும் கோபத்திற்கு ஆளாக்கியது. அவர்கள் தங்களின் எதிர்ப்பை சமூக வலைத்தளங்களில் முன்வைத்து கே.எல்.ராகுல் மற்றும் பாண்ட்யாவை விமர்சித்து வருகின்றனர். மேலும் பெண்கள் குறித்தும் இனவெறி குறித்து பாண்ட்யா சர்ச்சையை ஏற்படுத்தும் விதம் பேசியிருந்தார். இந்தக் கருத்தும் இப்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், பெண்கள் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தது பற்றி 24 மணிநேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர்களான ஹர்த்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுலுக்கு பிசிசிஐ நிர்வாகிகள் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

இந்தச் சர்சையை அடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் நான் பேசிய கருத்துகள் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நிகழ்ச்சியின் போக்கை கருத்தில் கொண்டே நான் நேர்மையாக பேசினேன். எந்த வகையிலும் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் நான் கருத்து தெரிவிக்கவில்லை'' எனப் பதிவிட்டுள்ளார். இதே கருத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். 

இதுகுறித்து பிசிசிஐ அதிகாரிகள் கூறுகையில், ஹர்த்திக் பாண்டியா ட்விட்டரில் மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது எனவும் கிரிக்கெட் வீரராக இருந்துகொண்டு டிவி நிகழ்ச்சியில் பொறுப்பற்ற முறையில் பேசியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நிர்வாகிகள் குழுத் தலைவர்  வினோத் ராய் கூறுகையில், இந்தச் சம்பவம் குறித்து பதிலளிக்க ஹர்த்திக் பாண்டியாவுக்கும் கே.எல்.ராகுலுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் 24 மணி நேரத்தில் அவர்கள் பதிலளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.