ஆண்ட்ரு சைமண்ட்ஸ் உடனான மோதலின்போது, தன்னை இனரீதியாக ஹர்பஜன் சிங் திட்டியதாக சைமண்ட்ஸ் பகீர் கிளப்பினார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் நேற்று முன்தினம் (மே 14) ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து நகரில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். தனது 46-வது வயதிலேயே சைமண்ட்ஸ் அகால மரணத்தை தழுவியது ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி அவருடன் பயணித்த வீரர்களுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.
அந்த வகையில் ஆண்ட்ரூ சைமன்ட்ஸ் உடன் பயணித்த இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங், அவரது மறைவு குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர், ''இன்று காலை எழுந்ததும் எனது போனை பார்த்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன், ஆண்ட்ரூ இப்போது இல்லை என்ற செய்தியால் நான் உடைந்து போனேன். அதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. ஏனென்றால் அவர் மிகவும் வலிமையானவர் . இது மிகவும் வருத்தமான விஷயம். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மறைவு நம் அனைவருக்குமே இழப்பு.
வெளிப்படையாக எங்களுக்கு நிறைய வரலாறு உண்டு. எங்கள் இருவரையும் ஒரே டிரஸ்ஸிங் ரூமில் சேர்த்த ஐபிஎல் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்திற்கு நன்றி. ஒருமுறை நான் அத்தகைய அன்பான மனிதரைப் பற்றி அறிந்து கொண்டேன், நாங்கள் மிகவும் நல்ல நண்பர்களாகி விட்டோம். நாங்கள் ஒன்றாக உட்கார்ந்து, குடித்து, சிரித்திருக்கிறோம். அவர் நிறைய கதைகளைப் பகிர்ந்து கொள்வார். அதிகாலை 2:30 மணிக்கு எனக்கு போன் செய்து 'ஏய் நண்பா என்ன செய்கிறீர்கள், வாங்க சந்திப்போம்' என்பார்'' என்று கூறினார்.
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மிகப் பிரபலமான சர்ச்சைகளில் ஒன்று, ஹர்பஜன் சிங் - ஆண்ட்ரு சைமண்ட்ஸ் மோதல். அனில் கும்ப்ளே தலைமையிலான இந்திய அணி 2008-இல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. சிட்னியில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் சைமண்ட்ஸ் உடனான மோதலின்போது, தன்னை குரங்கு என்று ஹர்பஜன் சிங் திட்டியதாக சைமண்ட்ஸ் பகீர் கிளப்பினார். இதனால் இனவெறி சர்ச்சை வெடித்தது. இதனைத்தொடர்ந்து ஹர்பஜனுக்கு மூன்று டெஸ்டில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிசிசிஐ தொடரை ரத்து செய்வதாக பதிலடி கொடுத்தது. பின் ஐசிசி தலையிட தடை நீக்கப்பட்டது.
ஆண்ட்ரு சைமண்ட்ஸ் உடன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய ஹர்பஜன் சிங் அதன்பின் ஐ.பி.எல் தொடரில் ஒன்றாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்து விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!