விளையாட்டு

மயங்க் ஏமாற்றம், விஹாரி விஸ்வரூபம்: இந்திய ஏ அணி ரன்கள் குவிப்பு!

மயங்க் ஏமாற்றம், விஹாரி விஸ்வரூபம்: இந்திய ஏ அணி ரன்கள் குவிப்பு!

webteam

தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய ஏ அணியின் ஹனுமா விஹாரி அபார சதமடித்தார்.

தென்னாப்பிரிக்க ஏ அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. முதலில், இந்திய போர்டு பிரசிடென்ட் அணி யுடன் மோதியது. அந்தப் போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் இந்திய ஏ அணியுடன் அங்கீகாரமில்லாத நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டியில் முகமது சிராஜின் அபார பந்து வீச்சால் இந்திய ஏ அணி வெற்றி பெற்றது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி இப்போது நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க ஏ அணி முதலில் பீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. அதன்படி இந்திய வீரர்கள் பிருத்வி ஷா, மயங்க் அகர்வால் களமிறங்கினர். முதல் போட்டியில் அசத்திய இருவரும் இந்தப் போட்டியில் ஏமாற் றம் அளித்தனர். மயங்க் அகர்வால் ரன் ஏதும் எடுக்காமலும் பிருத்வி ஷா 16 ரன்னிலும் அவுட் ஆயினர். முதல் போட்டியில் இந்த ஜோடி 277 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்து வந்த ஹனுமா விஹாரி, அவர்கள் இல்லை என்றால் என்ன என்பது போல, சிறப்பாக ஆடினார். அவருடன் ஆடிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 39 ரன்களிலும் அங்கித் பிரான் 80 ரன்களிலும் அவுட் ஆயினர். அங்கித்தும் விஹாரியும் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 177 ரன்கள் சேர்த்தனர்.

அபாரமாக ஆடிய விஹாரி 138 ரன்கள் குவித்து ஆடி வருகிறார். இவர் இங்கிலாந்து தொடரிலும் சிறப்பாக ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு உறுதுணையாக ஸ்ரீஹர் பரத் 30 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய ஏ அணி 4 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்துள்ளது.

இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடக்கிறது.