தங்கம் வெல்ல வேண்டும் என்பது தன்னுடைய வாழ்நாள் கனவாக இருந்ததாக ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து புதிய தலைமுறைக்கு தெரிவித்துள்ளார்.
வறுமைமிக்க குடும்பத்தில் இருந்து வந்த தமிழக வீராங்கனையான கோமதி மாரிமுத்து, ஆசிய தடகளப்போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவுக்கான முதல் தங்கப்பதக்கத்தை பெற்று நாட்டையே திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறார். அவருக்கு முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதுதவிர சமூக வலைத்தளங்களிலும் கோமதி மாரிமுத்துக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் தங்கம் வெல்ல வேண்டும் என்பது தன்னுடைய வாழ்நாள் கனவாக இருந்ததாக கோமதி மாரிமுத்து புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். தோகாவில் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த கோமதி மாரிமுத்து, “ இந்தியாவிற்கு முதல் தங்கப்பதக்கம் பெற்று கொடுத்துள்ளேன். தேசிய கீதம் இசைக்கும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. இது என்னுடைய வாழ்நாள் கனவு. ஒருமுறையாவது நிறைவேறுமா என்று எதிர்பார்த்து காத்திருந்தேன். அங்கிருந்த இந்தியர்கள் எனக்கு ஊக்கம் அளித்து வந்தார்கள். வெற்றி பெற்றதில் மிக்க மகிழ்ச்சி.
என்னுடைய ஊர் முடிகண்டம். வெளியில் யாருக்கும் தெரியாத சிறிய கிராமம் அது. நான் பதக்கம் வென்றதால் தற்போது என் ஊர் வெளியே தெரிவது எனக்கு பெருமையாக உள்ளது.
நான் முதல் இடம்பிடிப்பேன் என எதிர்பார்க்கவே இல்லை. கடைசி 50 மீட்டர் தொலைவில் இருந்தபோது நான் முதலிடம் பிடிக்கப்போகிறேன் என்பதை உணர்ந்தேன். வேகமாக ஓடி வெற்றி கோட்டை தாண்டிய உடன் என்னை அறியாமலேயே கையை தூக்கி வெற்றியை கொண்டாடினேன்” என தெரிவித்தார்.