தியோதர் டிராபிக்கான இறுதிப் போட்டியில் இந்தியா பி மற்றும் சி அணிகள் மோதுகின்றன.
தியோதர் டிராபிக்கான உள்ளூர் ஒரு நாள் போட்டித் தொடரின் லீக் ஆட்டங்கள் நடந்து வருகிறது. இத்தொடரில் நேற்று முன் தினம் நடந்த லீக் போட்டியில் இந்தியா ஏ -பி அணிகள் மோதின. இதில் பி அணி வெற்றி பெற்றது.
ராஞ்சியில் நேற்று நடந்த போட்டியில், விஹாரி தலைமையிலான இந்தியா ஏ மற்றும் சுப்மான் கில் தலைமையிலான இந்தியா சி அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய சி அணி, அபாரமாக ஆடி, 3 விக்கெட் இழப்புக்கு 366 ரன்கள் குவித்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மயங்க் அகர்வாலும் சுப்மான் கில்லும் இந்திய ஏ அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். மயங்க் அகர்வால் 111 பந்துகளில் 120 ரன்களும் சுப்மான் கில் 143 ரன்களும் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய இந்திய ஏ அணி 29.5 ஓவர்களில் 134 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் 232 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சி அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
2-வது தோல்வியை சந்தித்த ஏ அணி வெளியேற்றப்பட்டது. சி அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஜலஜ் சக்சேனா 41 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தியோதர் கோப்பை தொடரில் ஒரு பவுலரின் சிறந்த பந்து வீச்சு இது.
இன்று நடக்கும் 3-வது லீக்கில் இந்தியா சி- பி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகளும் வரும் 4- ஆம் தேதி இறுதிப்போட்டியில் மீண்டும் சந்திக்கின்றன.