விளையாட்டு

ஜடேஜா சதமடிக்க இதுதான் காரணம் - கருத்து சொன்ன கவுதம் கம்பீர்

ஜடேஜா சதமடிக்க இதுதான் காரணம் - கருத்து சொன்ன கவுதம் கம்பீர்

JustinDurai

இந்தியாவுக்கு வெளியே ஜடேஜா சிறப்பாக விளையாடிதன் விளைவே மொகாலி டெஸ்ட்டில் ரன்கள் குவிக்கக் காரணமாக அமைந்தது எனக் கூறியுள்ளார் கவுதம் கம்பீர்.

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 129.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்த டெஸ்டில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் இந்திய அணியின் முதுகொலும்பாக திகழ்ந்தார் ஜடேஜா.

இந்திய அணியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 175  (228 பந்துகள் 17 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) ரன்கள் குவித்தார். பேட்டிங்கில் ஜொலித்த ஜடேஜா பந்துவீச்சிலும் தனது மாயாஜாலத்தை காட்டினார். அவர் இலங்கை அணி விளையாடிய முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறுகையில், ''ஜடேஜா ஓர் மதிப்புமிக்க வீரர். வெளிநாடுகளில் அவர் அடித்த அரை சதங்கள் ஏராளம். இந்தியாவுக்கு வெளியே ஜடேஜா சிறப்பாக விளையாடிதன் விளைவாகவே மொகாலி டெஸ்ட்டில் ரன்கள் குவிக்கக் காரணமாக அமைந்தது. இன்னமும் அவரின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என நம்புகிறேன்.

நீங்கள் இறுதி முடிவை மட்டுமே பார்க்கிறீர்கள். ஆனால் இந்த 175 ரன்கள் எடுக்க நிறைய முயற்சிகள் செய்திருக்கிறார் ஜடேஜா. அதனால்தான் 7வது வீரராக இறங்க வாய்ப்பு கிடைத்தது. அந்த சூழ்நிலையில் ஜடேஜா ரன்களை எடுக்காமல் இருந்திருந்தால்,  வேறு யாரையாவது அணி நிர்வாகம் நியமித்திருக்க முடியும். ஏன், அஸ்வின் 7வது இடத்தில் இருக்கலாம். இதுபோன்ற கடினமான சூழ்நிலையில் ரன்களை எடுத்த பிறகு, உங்கள் புள்ளி விவரங்களை மேம்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும்'' என்று கம்பீர் கூறினார்.

இதையும் படிக்க: கபில்தேவின் சாதனையை முறியடித்த அஸ்வின்! இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்