“உலகக்கோப்பையை வெல்ல மெஸ்ஸி கவனமாக இருக்க வேண்டும். அவர் சிறந்த வீரர் தான், ஆனால் தனி ஒரு வீரரால் மட்டும் உலகக்கோப்பையை வென்று விட முடியாது” என்று கூறியுள்ளார் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் முன்னாள் வீரர் ராய் கீன்.
2022 ஃபிபா உலகக்கோப்பையில் நேற்று சவுதி அரேபியாவிற்கு எதிராக நடந்த போட்டியில் 2-1 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி. இதன்மூலம் அடுத்து சுற்று போட்டிகளுக்கு முன்னேற மீதமிருக்கும் போட்டிகளில் கட்டாயம் வெல்ல வேண்டிய இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது அர்ஜெண்டினா அணி.
இந்நிலையில் அர்ஜெண்டினா தோல்வி குறித்தும், மெஸ்ஸி குறித்தும் பேசியுள்ள மான்செஸ்டர் யுனைடெட் அணியின் முன்னாள் வீரர் ராய் கீன், “உலகக்கோப்பைக்கான உரிமையை மெஸ்ஸி பெற வேண்டும்” என்று கூறியுள்ளார்.
மேலும் மெஸ்ஸி குறித்து பேசியிருக்கும் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் முன்னாள் கேப்டன் ராய் கீன், ”நீங்கள் உலகக்கோப்பையை வெல்ல கவனமாக இருக்க வேண்டும். ஒரு வீரர் மட்டுமே, ஒரு உலகக்கோப்பையை வெல்வதற்கு தகுதியானவர் என்று நீங்கள் கூற முடியாது. அர்ஜெண்டினா அணியினரும் மெஸ்ஸிக்கு உலகக்கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பை பெற்று தரவேண்டும்” என்று கூறினார்.
மேலும் “மெஸ்ஸி இதற்கு முன் நான்கு முறை உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ளார். ஆனால் 2014ல் தான் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அர்ஜெண்டினா அணியை இறுதிவரை எடுத்து வந்தார். பிரேசிலில் ஜெர்மனியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா தோல்வியடைந்தது. மற்ற எந்த உலகக்கோப்பையிலும் அவரது அணியை அவர் எடுத்துவரவில்லை. அதனால் அவர் கவனமாக இருக்க வேண்டும்.
அர்ஜென்டினா இந்த ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் விருப்பமான அணிகளில் ஒன்றாக இருக்கிறது. அவர்கள் இறுதிப்போட்டி வரை சென்று அந்த உரிமையை பெற வேண்டும். மெஸ்ஸி ஒரு சிறந்த அணியில் இருக்கிறார். நாங்கள் அனைவரும் அவரை நேரலையில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.
மெஸ்ஸி ஒரு முழுமையான மேதை, அவரது சாதனை அற்புதமானது. அவர் உலகக்கோப்பையை வென்றால் தான் சிறந்த வீரர் என்று நான் நினைக்கவில்லை. அவர் எப்போதும் சிறப்பான வீரர் தான். ஆனால் அவர் உலகக்கோப்பையை வெல்ல ஆசைப்படுகிறார் என்று நான் நம்புகிறேன், அவருடைய அணி வீரர்கள் அதற்காக ஆசைப்படுகிறார்கள் என்று நான் நம்புகிறேன். மெஸ்ஸி உலகக் கோப்பைக்கு தகுதியானவர் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர் உலகக்கோப்பை உரிமையை பெற அவரது முழுமையான திறமையையும் வெளிக்கொண்டு வர வேண்டும்” என்று அவர் கூறினார்.