விளையாட்டு

குடிபோதையில் மனைவியை தாக்கியதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மீது பரபரப்பு புகார்!

குடிபோதையில் மனைவியை தாக்கியதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மீது பரபரப்பு புகார்!

Rishan Vengai

இந்திய அணியின் முன்னாள் இந்திய வீரர் வினோத் காம்ளி, தன்னுடைய மனைவியை தலையில் தாக்கியதற்காக மும்பை போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளார்.

பல முறை பலவிதமான மோசமான காரணங்களின் மூலம் வெளியே தெரிந்த வினோத் காம்ளி, முன்னதாக தான் தன்னுடைய பென்சன் பணத்தை வைத்து தான் காலத்தை ஓட்டுவதாக உருக்கமாக தெரிவித்திருந்தார். மேலும் தான் இப்போது மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறேன் என்றும், தனக்கு ஒரு வேலையை மும்பை கிரிக்கெட் வாரியம் ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார். அப்போது வினோத் காம்ளி குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட்டால், வேலை தருவதாக கிரிக்கெட் வாரியம் கண்டிசன் போட்டது. மேலும் ஒரு தனியார் தொழில் நிறுவனம், அவருக்கு மாதம் 1 லட்சம் ரூபாய்க்கு வேலை தருவதாகவும் அறிவித்திருந்தது.

இந்நிலையில் மீண்டும் சர்ச்சைக்குரிய விசயத்தில் மாட்டியுள்ளார் வினோத் காம்ளி. அவருடைய மனைவி ஆண்டிரியா அளித்த புகாரின் பேரில் வினோத் காம்ளி மீது, செக்சன் 324 ஆயுதத்தால் தாக்கியது மற்றும் செக்சன் 504 அவமதிப்பு செய்தல் பிரிவின் படி எஃப்ஐஆர் பதிவிடப்பட்டுள்ளதாக மும்பை போலீசார் தெரிவித்தனர்.

ஆண்டிரியா அளித்த புகாரில், “ கடந்த வாரம் இந்திய நேரப்படி பிற்பகல் 1 முதல் 1.30 மணிக்குள் மும்பையில் உள்ள பாந்த்ரா குடியிருப்பில் தன்னுடைய வீட்டிற்கு குடித்துவிட்டு வந்த காம்ளி, தன்னுடைய மனைவியை அசிங்கமாக திட்ட ஆரம்பித்துள்ளார். அதை அவரது 12 வயது மகன் தடுக்க முற்படும் போது, சமையல் அறைக்கு சென்ற காம்ளி சமைக்கும் பாத்திரத்தை எடுத்து வந்து மனைவியின் தலையில் அடித்துள்ளார். பின்னர் ஒரு பேட்டையும் எடுத்து வந்து அடிக்க முயன்ற போது, அதை ஆண்டிரியா தடுத்து வேகமாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்றதாக” குறிப்பிட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை முடித்துவிட்டு வந்து, வெள்ளிகிழமை அன்று காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் ஆண்டிரியா.

இந்நிலையில் அதே நாளில் குடியிருப்பில் இருந்து மதியம் 2 மணிக்கு வெளியே வந்த வினோத் காம்ளியும் தலையில் காயத்துடன் வந்ததாக, அவர்கள் குடியிருப்பின் காவலாளி தெரிவித்துள்ளார். அவரிடம் எப்படி காயம் ஏற்பட்டது என்று கேட்டதற்கு, காம்ளி தனது பக்கத்து வீட்டுகாரரிடம் தகராறு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். அவருடைய வீட்டில் பிரச்சனை நடந்திருந்தால், ஒருவேளை காம்ளி பொய் சொல்லிருக்க வேண்டும் என்று தான் நினைப்பதாக காவலாளி கூறியுள்ளார்.

வினோத் காம்ளி இதுபோன்ற மோசமான காரணங்களுக்காக வெளியில் தெரிவது இது முதல்முறையானது இல்லை. 2022ஆம் ஆண்டு ஏற்கனவே அவர் மீது, குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதற்கு முன்னதாக காம்ளி மற்றும் அவரது மனைவி ஆண்டிரியா இருவரும் அவர்கள் வீட்டு வேலையாளை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டனர். மேலும் 2018ஆம் ஆண்டு பாடகர் ஒருவரின் மகனை தாக்கியதாக வினோத் காம்ளி மற்றும் ஆண்டிரியா இருவரின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பராக அறியப்பட்ட வினோத் காம்ளி, சர்வதேச போட்டிகளில் ஒழுக்கமின்மை போன்ற பல காரணங்களுக்காக அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைவான போட்டிகளில் விளையாடி அற்புதமான ரெக்கார்டை வைத்துள்ளார் காம்ளி. 17 டெஸ்ட்களில் விளையாடியுள்ள அவர் 1084 ரன்களை சேர்த்துள்ளார். அதில் 200 ரன்களை 2 முறையும், 4 சதங்களும், 3 அரை சதங்களும் அடங்கும். டெஸ்ட் போட்டிகளில் அவருடைய சராசரி 54.2ஆக இருக்கிறது.

முன்னதாக தனது குடும்ப சூழ்நிலைக்காக குடிப்பதை விட்டுவிடுகிறேன், தனக்கு ஒருவேலை கொடுங்கள் என்று கோரிக்கை வைத்த காம்ளி, மீண்டும் குடிப்பழக்கத்தாலேயே இன்னொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.