விளையாட்டு

இங்கிலாந்து தோல்வி: பழைய ட்வீட்டை சுட்டிக்காட்டி மைக்கேல் வாகனை ட்ரோல் செய்த வாசிம் ஜாஃபர்

இங்கிலாந்து தோல்வி: பழைய ட்வீட்டை சுட்டிக்காட்டி மைக்கேல் வாகனை ட்ரோல் செய்த வாசிம் ஜாஃபர்

EllusamyKarthik

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரை 0 - 3 என்ற கணக்கில் இழந்துள்ளது. இந்தத் தொடரில் இன்னும் இரண்டு போட்டிகள் எஞ்சியிருக்க இது படுதோல்வியாக பார்க்கப்படுகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, மூன்றாவது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 68 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் வாசிம் ஜாஃபர், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனை ட்ரோல் செய்துள்ளார். அதுவும் மைக்கேல் வாகனின் பழைய ட்வீட் ஒன்றை சுட்டிக்காட்டி ட்ரோல் செய்துள்ளார் அவர்.

இந்திய அணி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பின்னடைவை சந்திக்கும் போதெல்லாம் கடுமையாக விமர்சிக்கும் போக்கை கடைபிடித்து வந்தவர் வாகன். இந்த நிலையில் இங்கிலாந்து அணி 68 ரன்களுக்குள் ஆல் அவுட்டானதை ஜாஃபர் விமர்சித்துள்ளார்.

கடந்த 2019-இல் இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 92 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இருந்தது. “இன்றைய காலகட்டத்தில் ஒரு அணி 100 ரன்களுக்குள் ஆல் அவுட்டாவதை நம்ப முடியவில்லை” என அப்போது வாகன் ட்வீட் செய்திருந்தார். அதை அப்படியே ஸ்க்ரீன் ஷாட் எடுத்து, வீடியோவாக பகிர்ந்து ட்ரோல் செய்துள்ளார் ஜாஃபர். “வாகன் இங்கிலாந்து அணி 68 ரன்களுக்கு ஆல் அவுட்” என அதற்கு கேப்ஷனும் கொடுத்துள்ளார் அவர்.

ஜாஃபரின் இந்த ட்வீட் சுமார் 70 ஆயிரம் லைக்குகளை கடந்து சென்றுள்ளது. பலரும் மைக்கேல் வாகனை சமூக வலைதளத்தில் ட்ரோல் செய்துள்ளதை பார்க்க முடிகிறது.