“நாங்கள் ஆக்டிவாக கிரிக்கெட் விளையாடிய போது யோ-யோ டெஸ்ட் இருந்திருந்தால் கங்குலி, சச்சின், லக்ஷமண் மாதிரியான வீரர்கள் அணியில் விளையாட தேர்வாகி இருக்க மாட்டார்கள்” என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் சேவாக் சொல்லியுள்ளார். ரசிகர் ஒருவர் ஃபிட்னெஸ் குறித்து எழுப்பியிருந்த சந்தேகத்திற்கு சேவாக் இந்த பதிலை சொல்லியுள்ளார்.
“அவர்கள் பீப் டெஸ்டில் தேர்ச்சி பெற்று நான் பார்த்ததே கிடையாது. நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்களான 12.5 என்ற இலக்கை அவர்கள் ஒருபோதும் எட்டியது கிடையாது. இருப்பினும் அவர்களது அபரிமிதமான திறன் தான் இந்திய அணியில் அவர்களை விளையாட செய்தது. அது போல ஃபிட்னெஸ் சோதனைகளை காட்டிலும் வீரர்களின் திறனுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என சேவாக் சொல்லியுள்ளார்.
ரசிகர் ஒருவர் சேவாக்கிடம் ஹர்திக் பாண்ட்யா டி20 தொடரில் பந்து வீச போதுமான உடற்தகுதி இல்லாத போது அவரை ஏன் அணியில் சேர்க்க வேண்டும்? ஏன் வருண் சக்கரவர்த்தியை சேர்க்க கூடாது? என கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு தான் சேவாக் இந்த பதிலை சொல்லியிருந்தார்.
அண்மைய ஆண்டுகளாக இந்திய அணியில் இடம்பிடித்து விளையாட வேண்டுமென்றால் யோ-யோ டெஸ்டில் தேறினால் மட்டுமே வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. வருண் சக்கரவர்த்தி மற்றும் ராகுல் திவாட்டியா இங்கிலாந்து தொடருக்கான டி20 தொடரில் இடம் பிடித்தும் விளையாடாமல் போனதற்கு இதுவே காரணம்.