விளையாட்டு

முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலை..!

முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலை..!

webteam

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி.சந்திரசேகரின் தற்கொலை கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

பொறியியல் பட்டதாரியான வக்கடை பிக்சேஸ்வரன் சந்திரசேகர், 1961-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி சென்னையில் பிறந்தார். சிறு வயது முதலே கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டிருந்த இவர், தமிழக அணிக்காகவும், இந்திய அணிக்காகவும் விளையாடியுள்ளார். ஓய்வுக்குப் பிறகு பயிற்சியாளர், வர்ணனையாளர், ஆலோசகர் என பன்முகத்தன்மையுடன் விளங்கிய வி.பி.சந்திரசேகர், தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் இடம்பெற்றுள்ள காஞ்சி வீரன்ஸ் அணியின் உரிமையாளராவார். ஐபிஎல் கிரிக்கெட் ஏலத்தில் மகேந்திர சிங் தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெற்றுக்கொடுத்த பெருமைக்குரியவர் வி.பி.சந்திரசேகர் என்பது நினைவுகூரத்தக்கது.

இந்நிலையில் மயிலாப்பூரில் உள்ள தனது வீட்டில் விபி சந்திரசேகர் நேற்று இரவு தற்கொலை செய்துக் கொண்டார். நேற்று மாடிக்குச் சென்றவர் நீண்ட நேரமாகியும் கீழே வராததால் அங்கே சென்று பார்த்த குடும்பத்தினர், அவர் மரணமடைந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக மயிலாப்பூர் காவல்துறையினர், இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் வழக்குப் பதிவு செய்து, உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நிதி நெருக்கடியால் வி.பி.சந்திரசேகர் தற்கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது செல்போனையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.