இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நிதான ஆட்டக்காரர் என்றால் எல்லோருக்கும் சட்டென நினைவுக்கு வருவது செத்தேஷ்வர் புஜாரா தான். இதுவரை 78 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரிலும் விளையாடி வருகிறார். இந்த தொடரில் ஐந்து இன்னிங்ஸில் விளையாடி 113 ரன்களை குவித்துள்ளார்.
இந்நிலையில் அவரது ஆட்டத்தை விமர்சித்துள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர். குறிப்பாக புஜாரா ஷாட் ஆடவே பயப்படுகிறார் என அவர் சொல்லியுள்ளார்.
“அவரது ஆட்டத்தை பார்த்தால் ரன் குவிப்பதற்கு பதிலாக களத்தில் நிலைத்து நிற்கவே விரும்புவதாக தெரிகிறது. அவர் பெரிய ஷாட் ஆடவே அச்சப்படுகிறார். அவரது ஆட்டத்தில் தாக்கமே இல்லை. ரன்களை அடிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார். அது இந்திய அணியின் பேட்டிங்கிலும் எதிரொலிக்கிறது” என தெரிவித்துள்ளார் ஆலன் பார்டர்.
சிட்னி டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் புஜாரா 176 பந்துகளை எதிர்கொண்டு 50 ரன்களை எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.