முதல் போட்டியில் 3-0 என பர்ன்லியை வீழ்த்தி வெற்றிகரமாக சீசனைத் தொடங்கியிருக்கிறது நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி. கடந்த ஆண்டு கோல்டன் பூட் விருது வென்ற எர்லிங் ஹாலண்ட் 2 கோல்கள் அடித்து அசத்தினார்.
2023-24 பிரீமியர் லீக் சீசன் இன்று (ஆகஸ்ட் 12) அதிகாலை தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி, கடந்த சீசன் சாம்பியன்ஷிப்பை வென்று புரமோட் ஆகியிருந்த பர்ன்லி அணியை சந்தித்தது. முன்னாள் மான்செஸ்டர் சிட்டி கேப்டன் வின்சென்ட் கொம்பனிக்கும் அவரது பயிற்சியாளர் கார்டியோலாவுக்கும் எதிரான போட்டி என்பதால், இந்த ஆட்டம் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. கடந்த சாம்பியன்ஷிப் சீசனில் 101 புள்ளிகள் எடுத்து கலக்கிய பர்ன்லி தங்கள் அட்டாகிங் ஸ்டைலுக்காக பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.
இந்த சீசனில் 4 முறை 'மேனேஜர் ஆஃப் தி மன்த்' விருது வென்றிருந்தார் கொம்பனி. ஒரு சீசனில் அந்த விருதை 4 முறை வென்ற ஒரே பயிற்சியாளர் என்ற சாதனையும் படைத்தார். ஒரு மேனேஜராக அவர் வளர்ந்து வருவதால், இது மற்றுமொரு குரு-சிஷயன் போட்டியாகக் கருதப்பட்டது. இந்தப் போட்டியில் மான்செஸ்டர் சிட்டிக்கு நிச்சயம் சவால் காத்திருக்கிறது என்றும் கருதப்பட்டது. ஆனால் ஹாலண்ட் வேறு ஐடியாக்கள் வைத்திருந்தார்.
ஆட்டத்தின் மூன்றாவது நிமிடத்திலேயே இந்த சீசனின் முதல் கோலை அடித்தார் அவர். மான்செஸ்டர் சிட்டி அணிக்கு கார்னர் கிடைக்க, அதை பர்ன்லியால் சரியாக கிளியர் செய்ய முடியவில்லை. ரீபௌண்ட் ஷாட்டை இரண்டாவது போஸ்ட்டுக்கு சிட்டி வீரர்கள் அனுப்ப, அதை பெனால்டி ஏரியாவுக்கு ஹெட் செய்து அனுப்பினார் ராட்ரி. அங்கு டிஃபண்டர்களால் மார்க் செய்யப்பட்டிருந்தாலும் முதல் ஷாட்டிலேயே அதை கோலாக மாற்றினார் ஹாலண்ட். கடந்த சீசனில் 36 கோல்கள் அடித்து மிரட்டியவர் விட்ட இடத்திலிருந்தே தொடங்கியிருக்கிறார்.
நல்லபடியாக சீசனைத் தொடங்கியிருந்தாலும், மான்செஸ்டர் சிட்டி அணிக்கு விரைவில் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. தொடர்ந்து தொடைப் பகுதியில் காயத்தால் அவதிப்பட்டுவரும் கேப்டன் கெவின் டி புருய்னா இந்தப் போட்டியின் போதும் அதனால் அவதிப்பட்டார். 23வது நிமிடத்திலேயே அவர் களத்திலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் மான்செஸ்டர் சிட்டி அணிக்காக பிரீமியர் லீக் அறிமுகம் பெற்றார் முன்னாள் செல்சீ வீரர் மடியோ கோவசிச்.
டி புருய்னா வெளியேறிய பிறகு சில நிமிடங்கள் மான்செஸ்டர் சிட்டி தடுமாறியது. அந்த அணியின் டிஃபண்டர்கள் ஒருசில பாஸ்களை தவறவிட அது பர்ன்லி அணிக்கு வாய்ப்புகள் உருவாகக் காரணமாக இருந்தது. இருந்தாலும் எப்படியோ டிஃபண்ட் செய்து கோல் விழாமல் பார்த்துக்கொண்டது மான்செஸ்டர் சிட்டி. சில நிமிடங்கள் ஆட்டத்தில் இல்லாமல் இருந்தாலும் 36வது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்தது மான்செஸ்டர் சிட்டி. ஜூலியன் ஆல்வரஸ் கொடுத்த பாஸை மீண்டும் முதல் முறையே கோல் நோக்கி அடித்து கோலாக்கினார் எர்லிங் ஹாலண்ட். இதன்மூலம் 36 பிரீமியர் லீக் போட்டிகளில் 38 கோல்கள் அடித்திருக்கிறார் அவர்.
இந்தப் போட்டியில் ஹாலண்டை விட சிறப்பாக ஆடிய ஒரு வீரர் ராட்ரி தான். ஹாலண்டின் முதல் கோலுக்கு அசிஸ்ட் செய்தவர், பலமுறை பர்ன்லி அணியின் வாய்ப்புகளைத் தடுத்து நிறுத்தினார். இரண்டாவது பாதியில் ஒரு படி மேலே சென்று கோலும் அடித்தார் அவர். இம்முறை மான்செஸ்டர் சிட்டிக்கு கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பை பர்ன்லி சரியாக கிளியர் செய்யாமல் போக ராட்ரி அதை கோலாக்கினார். அதனால் 3 கோல்கள் முன்னிலை பெற்றது மான்செஸ்டர் சிட்டி.
பிரீமியர் லீகுக்கு திரும்பிய முதல் போட்டியில், ஹோம் கிரவுண்டில் 3 கோல்கள் பின்தங்கியிருந்த பர்ன்லி அணிக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. கூடுதல் நேரத்தின் நான்காவது நிமிடத்தில் கைல் வாக்கரை ஃபவுல் செய்ததற்காக அனாஸ் ஜரூரி சிவப்பு அட்டை பெற்று வெளியேறினார்.
இறுதியில் 3-0 என வெற்றி பெற்று இந்த சீசனை பாசிட்டிவாக தொடங்கியிருக்கிறது மான்செஸ்டர் சிட்டி. முதல் போட்டியில் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை என்றாலும் எதிர்பார்த்த முடிவைப் பெற்றது கார்டியோலாவின் அணி. அந்த அணி அடுத்த கேம்வீக்கில் நியூகாசில் யுனைடட் அணியை தங்கள் ஹோம் கிரவுண்ட் எடிஹாட் மைதானத்தில் சந்திக்கிறது. அதற்கு முன் அந்த அணிக்கு செவியாவுக்கு எதிரான UEFA சூப்பர் கோப்பை போட்டியும் இருக்கிறது. பர்ன்லி அணி இரண்டாவது கேம் வீக்கில் லுட்டன் டவுனை எதிர்த்து விளையாடுவதாக இருந்தது. ஆனால் லுட்டன் அணியின் மைதானம் இன்னும் பிரீமியர் லீகுக்குத் தயாராகவில்லை என்பதால் அந்த ஆட்டம் தள்ளிவைக்கப்பட்டது. அதனால் அடுத்தது அந்த அணி ஆஸ்டன் விலாவை ஆகஸ்ட் 27ம் தேதி எதிர்கொள்கிறது.