சென்னை சேப்பாக்கத்தில் விளையாடியபோது ஒரு ஹீரோவைப்போல உணர்ந்தேன் என்று இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருதுப்பெற்ற இந்திய வீரர் ரவிசந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 329 ரன்களை சேர்த்தது. இதில் ரோகித் சர்மா 161 ரன்கள் குவித்தார். பின்பு முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அஸ்வின் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அஸ்வின் 106 ரன்களை விளாசினார்.
இதனையடுத்து அஸ்வினுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அப்போது பேசிய அஸ்வின் "சிறுவயதில் சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு முறையாவது விளையாடுவேனா என்ற ஏக்கம் இருந்தது. ஆனால் இப்போது இதே மைதானத்தில் ரசிகர்கள் எனக்காக கைதட்டுகிறார்கள். நான் இந்த மைதானத்தில் 8-9 வயதில் முதன்முதலாக விளையாடி இருக்கிறேன். இதே மைதானத்தில் இருந்து போட்டிகளை பார்த்து இருக்கிறேன். என்னுடைய அப்பா அனைத்து போட்டிகளையும் காண என இங்கு அழைத்து வருவார்"
மேலும் பேசிய அவர் "இப்போது என்ன பேசுவதென்று தெரியவில்லை. வார்த்தைகள் வரவில்லை. இப்போது சென்னையில் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். ஆனால் இந்த டெஸ்ட் போட்டிதான் என மிகச் சிறந்ததாக இருக்கிறது. ஒரு ஹீரோவைப்போல உணர்கிறேன். கொரோனா காலத்தில் பெரிதாக கிரிக்கெட் போட்டிகள் ஏதும் நடக்கவில்லை. புத்திசாலித்தனமான சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் திறளாக எந்த பயமுமின்றி கிரிக்கெட் பார்க்க வந்து இருக்கிறார்கள். இந்த வெற்றியை சென்னை ரசிகர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்" என்றார் அஸ்வின்.