விளையாட்டு

உலகக் கோப்பை தொடக்க விழா: படு ஸ்லோவாக இயங்கிய ஜியோ சினிமா -வெறுப்பான இந்திய ரசிகர்கள்

உலகக் கோப்பை தொடக்க விழா: படு ஸ்லோவாக இயங்கிய ஜியோ சினிமா -வெறுப்பான இந்திய ரசிகர்கள்

JustinDurai

ஃபிஃபா உலகக் கோப்பை தொடக்க விழாவை தங்கு தடையின்றி பார்க்க முடியாதபடி இந்திய ரசிகர்களை வெறுப்பேற்றியது ஜியோ சினிமா.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான ஃபிஃபா  உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் நேற்று வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. நடிகர் மோர்கன் ஃப்ரீமேன், பி.டி.எஸ் பாடகர் ஜங் குக், நட்சத்திர பாடகர் ஜங் குக் உள்ளிட்டோர் அரங்கேற்றிய கலை நிகழ்ச்சிகளை, ரசிகர்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர்.

இந்த பிரமாண்டமான தொடக்க விழாவை கண்டுகளிக்க இந்திய ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் இந்தியாவில் வழக்கம்போல் பார்க்கும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ், சோனி நெட்வொர்க் மற்றும் டிடி ஸ்போர்ட்ஸ் என எதிலும் உலகக் கோப்பை போட்டி ஒளிபரப்பு ஆகவில்லை. 'ஸ்போர்ட்ஸ் 18' சேனலில்  ஒளிபரப்பானது. அதேபோல் டிஸ்னி ஹாட் ஸ்டார், அமேசான் பிரைம் போன்ற எந்த முன்னணி ஓடிடி தளத்திலும் ஸ்ட்ரீமிங் செய்யப்படவில்லை. 'ஜியோ சினிமா' தளத்தில் தான் போட்டி ஒளிப்பரப்பு செய்ய்யப்ட்டது.

இந்த நிலையில், தொடக்க விழா நிகழ்ச்சியை ஜியோ சினிமாவில் காண இருந்த இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காரணம், 'ஜியோ சினிமா' ஆப் சரியாக இயங்கவில்லை. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் ஜியோ சினிமா மிகவும் மிகவும் ஸ்லோவாக இயங்கியது. இதனால் கடுப்பான பலரும் ட்விட்டரில் பதிவிட தொடங்கினர். இதனால் ஜியோ சினிமா தேசிய அளவில் ட்விட்டரில் டிரெண்ட் ஆனது. இதையடுத்து செயலியை அப்டேட் செய்து கொள்ளும்படி ஜியோ சினிமா 'ட்விட்' செய்தது. ஆனால் அப்டேட் செய்த பிறகும்கூட 'ஆப்' மெதுவாகவே இருந்ததாக பயனர்கள் மீண்டும் குமுறினர்.

தொடக்க விழா மட்டுமின்றி, கத்தார் - ஈக்வடார் இடையேயான தொடக்க ஆட்டமும் சுற்றிக்கொண்டே இருந்தது. உலகிலேயே அதிக மக்களால் பார்க்கப்படும் ஒரு போட்டியை தங்கு தடையின்றி பார்க்க முடியாதபடி, 'ஜியோ சினிமா' செய்துவிட்டதாக பலரும் தங்களது ஆதங்கத்தை சமூக வலைத்தளங்களில் கொட்டினர்.

இதையும் படிக்கலாமே: ஆனாலும் இந்த கத்தார் ரொம்ப ஸ்டிரிக்ட் தாம்பா! ரசிகர்களுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகளா!!