மொஹாலியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் மகேந்திர சிங் தோனியை பார்க்க ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள்ளேயே நுழைந்தார். அவர் கீப்பிங் செய்து கொண்டிருந்த இடத்திற்கு சென்று காலில் விழுந்து வணங்கினார்.
இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவின் அதிரடியாக இரட்டை சதத்தால் 392 ரன்காள் குவித்தது. பின்னர் விளையாடிய இலங்கை அணி 251 ரன்கள் எடுத்தது. போட்டியில் இந்திய அணி பீல்டிங் செய்து கொண்டிருந்த போது, ரசிகர் ஒருவர் திடீரென மைதானத்திற்குள் நுழைந்து ஓடினார். அவர் கீப்பிங் செய்து கொண்டிருந்த தோனிக்கு அருகில் சென்று அவரது பாதத்தை தொட்டு வணங்கினார். தோனியும் இதனை கண்டு சற்று அதிர்ந்து போனார். அவருக்கு சங்கடத்தையும் ஏற்படுத்தியது. கிளவ்ஸ் அணிந்த கைகளால் அந்த ரசிகரை எவ்வளோ தடுக்க முன்றார். உடனடியாக மைதான பாதுகாவலர் உள்ளே வந்து அவரை அழைத்துச் சென்றார். மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் இதனை கண்டு மெய்சிலிர்த்தனர். மைதானத்திற்குள் ரசிகர் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
தோனிக்கு இதற்கு முன்பும் இதேபோல் சில சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டத்தின் போது ரசிகர் ஒருவர் உள்ளே நுழைந்து தோனியின் பாதத்தை தொட்டு வணங்கினார். விஜய் ஹசாரே டிராபியின் போது இதேபோல் ஒரு சம்பவம் நடைபெற்றது. சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு தோனிக்கு தான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
முன்னதாக, இளம் வீரர் பாண்ட்யாவும், தோனியும் பயிற்சியின் போது ரன்னிங் ஓடிய வீடியோ காட்சிகள் நேற்று முழுவதும் வைரலாக பரவி வந்த நிலையில், இன்று ரசிகர் மைதானத்திற்கு சென்று தோனியின் காலினை தொட்டு வணங்கிய வீடியோ பகிரப்பட்டு வருகிறது.