சக வீரரை கொலை செய்த புகாரில், தலைமறைவாக இருந்த மல்யுத்த வீரர் சுஷில் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலை குற்றத்தின் பின்னணியில் வெளிவந்திருக்கும் தகவல்கள் ஒவ்வொன்றும் அதிர்ச்சி ரகம். அதனை சற்றே விரிவாக பார்க்கலாம்.
2008-ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்கில் இந்தியர்களை தலைநிமிர வைத்த தருணம். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு மல்யுத்த விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்று, `இந்தியாவிலும் மல்யுத்ததில் மிகச்சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள்' என்று உலகிற்கு உணரவைத்தவர் பிரபல மல்யுத்த வீரர் சுஷில் குமார். இவரே 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்திய மல்யுத்த உலகத்தை உச்சாணியில் உட்கார வைத்தார். தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக்கில் பதக்கம், 2010ல் உலக சாம்பியன்ஷிப் பட்டம் என மல்யுத்தத்தில் உலகின் மிகச் சிறந்த வீரராக உருவெடுத்தார் சுஷில்.
இதனால் மற்ற மல்யுத்த வீரர்கள் எட்டாத புகழ் சுஷிலுக்கு கிடைக்க தொடங்கியது. டெல்லியின் புகழ்பெற்ற சத்ரசால் ஸ்டேடியத்தில் அமைந்திருக்கும் அகாரா (குருகுலம்) மல்யுத்த பயிற்சியகம் தான் சுஷில் குமார் பயிற்சி பெற்ற தளம். இந்த குருகுலத்தில் பயிற்சிபெறும் மற்றவர்கள், சுஷிலின் புகழ் காரணமாக அவரின் காலைத்தொட்டு வணங்கிவிட்டே பயிற்சியை தினமும் தொடங்குவது வழக்கம். அடுத்தடுத்து கிடைத்த வளர்ச்சியின் காரணமாக சத்ரசால் ஸ்டேடிய அகாரா மல்யுத்த அரங்கில் கடவுளுக்கு நிகராக வணங்கப்பட்டு வந்தார் சுஷில் குமார்.
இப்படிப்பட்ட சுஷில் குமார் சமீபகாலமாக நடந்த ஒற்றை சொத்து தகராறால் ஓர் இளம் மல்யுத்த வீரரைப் பலி வாங்கியிருப்பதுடன் மக்கள் முன் தற்போது கொலைக் குற்றம்சாட்டப்பட்டவராக நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். தற்போது நடந்துள்ள சம்பவத்தால் சுஷில் குமாரின் இன்னொரு மோசமான பக்கம் குறித்த தகவல்கள் வெளியாகி அதிரவைக்கின்றன. சொத்து தகராறு காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே குண்டர்கள் உடன் தொடர்பு வைத்திருந்திருக்கிறார்.
அந்தக் கும்பல் நிலப் பிரச்னை, சொத்து தகராறு, தொழில் மோதல் எனப் பலவற்றிலும் தலையிட்டு கட்டப்பஞ்சாயத்துகள் செய்து வந்திருக்கிறது. இதன்தொடர்ச்சியாக தான் சமீபத்தில் பயிற்சி பெற்று வந்த சத்ராசல் ஸ்டேடியத்தின் கார் பார்க்கிங்கில் வைத்து இளம் மல்யுத்த வீரர் சாகர் ராணா எனும் 23 வயது இளைஞர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் கொலை குற்றத்தில் சுஷில் குமார்தான் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபகிறார்.
இந்தத் தகவல் வெளிச்சத்துக்கு வர, 18 நாள் தலைமறைவாக இருந்து வந்தார் சுஷில். இந்தநிலையில், சமீபத்தில் அவரை டெல்லி போலீஸ் கைது செய்தது. வினோதமாக இவர் கைது செய்யப்பட்ட நாள், உலக மல்யுத்த தினமாக அமைந்துவிட்டது. இதற்கிடையே, இந்தக் கொலை குற்றம், அதைத் தொடர்ந்து நடந்த சுஷில் குமாரின் கைது ஆகியவை இந்திய மல்யுத்த விளையாட்டுக்குப் பின் நடந்துவரும் கிரிமினல் பின்னணிகளை வெளிச்சம் போட்டு காட்டத் தொடங்கியுள்ளது. கிட்டத்தட்ட 'மல்யுத்த மாஃபியா' என சொல்லும் அளவுக்கு கிரிமினல் குற்றங்கள் தலைவிரித்தாடின என வடமாநிலங்கள் பட்டியலிடுகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக டெல்லி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் பதிவான குற்றச்செயல்கள் பெரும்பாலும் மல்யுத்த வீரர்களின் பெயரிலேயே பதிவாகி இருப்பதாக சொல்கின்றன ஒரு புள்ளி விவரம். இந்த மாநிலங்களில் அரசியல்வாதிகளுக்கான பாதுகாவலர்கள் முதல் வங்கிகளில் வட்டி கட்டாதவர்களை அடித்து மிரட்ட, தொழிலதிபர்களிடம் இருந்து பணம் பறிக்க போன்ற பல்வேறு செயல்களை செய்யும் பணியில் மல்யுத்த வீரர்களே பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
சில உதாரணங்கள்...
சில ஆண்டுகளுக்கு முன் ஹரியானாவில் ஒரு பஞ்சாயத்து தலைவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதில் சம்பந்தப்பட்டு கைது செய்யப்பட்டவர் ஒரு மல்யுத்த வீரர். இதேபோல் ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர் தலைவர் உமர் காலித்தை சுட்டுக்கொல்ல முயன்றதாக கைது செய்யப்பட்ட குற்றவாளியும் ஒரு முன்னாள் மல்யுத்த வீரர்.
இவ்வளவு ஏன், கடந்த பிப்ரவரியில் பெண் வீராங்கனை ஒருவர் வெளிப்படையாக தனது மல்யுத்த பயிற்சியாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினார். அந்த மல்யுத்த பயிற்சியாளர் 5 பேரை சுட்டுக்கொன்று வடமாநிலங்களை அதிரவைத்தார். இப்படி மல்யுத்த வீரர்கள் மீதான கிரிமினல் குற்றச்சாட்டுகள் சமீப காலமாக ஏராளமாக பதிவாகி வருகின்றன.
ஆனால், இதை பற்றியெல்லாம் இந்திய மல்யுத்த அமைப்பு (Wrestling Federation of India) கவனிப்பதே இல்லை. இந்த அமைப்பின் தலைவர் பிரிஜி பூஷன் சரண் சிங். உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த இவர் கைசர்கஞ்ச் தொகுதியில் இருந்து ஆறாவது முறையாக பாஜக சார்பில் நாடாளுமன்ற எம்பியாக பதவி வகித்து வருகிறார். எம்பியாக இருந்தாலும் இவர் மீதே பல கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதில் கொலை முயற்சி, கடத்தல் உள்ளிட்ட வழக்குகளும் அடக்கம்.
இதற்கிடையே, சுஷிலின் கைது, அதன் சூழ்நிலைகள் மற்றும் அதைத் தொடர்ந்து வந்த கதை ஆகியவை மர்மத்துக்கு வித்திடுகின்றன. அவரின் கைது தொடர்பாக இரண்டு கதைகள் வெளிவந்தன. முதலாவது அவர் மே 22 சனிக்கிழமையன்று பஞ்சாப் காவல்துறையிடம் சரணடைந்ததாக அவர் தரப்பு கூறுகிறது. மற்றொன்று, டெல்லி காவல்துறையின் சிறப்புக் குழு சுஷிலையும் அவரது கூட்டாளியையும் முண்ட்காவில் ஒரு ஸ்கூட்டரில் பயணித்தபோது கைது செய்தது எனக் கூறப்படுவது.
அதுமட்டுமில்லை, இந்தக் கொலைக் குற்றமே ஒரு மர்மமாக இருக்கிறது. இந்த மர்மத்துக்கு போலீஸ் தரப்பே வெளிச்சம் பாய்ச்ச வேண்டி இருக்கிறது.
ஆனால், ஒன்று மட்டும் உண்மை. எந்த சுஷில் குமாரால் மொத்த இந்தியாவும், மல்யுத்த உலகமும் தலைநிமிர்ந்ததோ, இப்போது அவரால் அதே இந்தியா களங்கப்பட்டு நிற்கிறது. இதை துடைத்தெறிய மல்யுத்த உலகில் நடக்கும் குற்றப் பின்னணியையும், மல்யுத்த அமைப்பையும் சீரமைப்பு செய்வது காலத்தின் கட்டாயம்!
- மலையரசு