பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில், இலங்கை ரூபாயில் 200 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டுபவர்களுக்கு அந்நாட்டு அரசு 25 % கூடுதல் வரி விதிக்க உள்ளது.
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி குறித்து நடைபெற்ற இரண்டாவது நாள் விவாதத்தில் அதிபர் கோட்டாபய ராஜபக்ச கலந்து கொண்டார். இலங்கை நாடாளுமன்ற நடைமுறைகளின் படி விவாதத்தில் அதிபர் பங்கேற்க வேண்டியது கட்டாயமில்லை. ஆனாலும், கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்று நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வருவதால், அதிபர் கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார். அப்போது, நாடாளுமன்றத்திற்கு எதிரே மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் விதமாக, இலங்கை ரூபாய் மதிப்பில் ஆண்டுக்கு 200 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் தனி நபர் மற்றும் நிறுவனங்களுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கும் மசோதா, வாக்கெடுப்பு எதுவும் நடத்தப்படாமலேயே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், அனைத்து எம்.பிக்களும் சொத்து மதிப்பை வெளியிட வேண்டும் என்று ஆளும்கட்சியான இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தாரக பாலசூர்யா வலியுறுத்தினார்.
இதற்கிடையே, மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம், மின் வெட்டு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல் நேரத்தை வீணாக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் விவாதித்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கொழும்பு அருகே உள்ள தலவாக்கலை என்ற இடத்தில், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் தமிழ் முற்போக்கு கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இலங்கையின் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும் என்ற முழக்கம் அங்கு ஒலிக்க தொடங்கியுள்ளது.