இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் எவின் லெவிஸ் விலகியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட வந்துள்ளது. இதில், முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியிலும் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளும் ஒரு நாள் போட்டித் தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி 21 ஆம் தேதி கவுகாத்தியில் நடக்கிறது. இரண்டாவது போட்டி, 24-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. இந்த இரண்டு போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றிருந்த ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு உமேஷ் யாதவ் இடம்பிடித்தார்.
(பூரான்)
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய தாகூர், மொத்தமே 1.4 ஓவர்கள் மட்டுமே பந்து வீசினார். அவரது வலது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறி னார். காயம் குணமாகாததால் ஒருநாள் போட்டிக்கான அணியிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி விவரம்:
விராத் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல். ராகுல், அம்பதி ராயுடு, மணிஷ் பாண்டே, தோனி, ரிஷப் பன்ட், ஜடேஜா, சேஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, கலீல் அகமது, உமேஷ் யாதவ்.
(பாவெல்)
இதே போல வெஸ்ட் இண்டீஸ் அணியில் முதல் இரண்டு போட்டிக்கான வீரர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் எவின் லெவிஸ் விலகியுள்ளார். அவர் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். சொந்த காரணங்களுக்காக அவர் விலகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அவருக்கு பதிலாக, ஒரு நாள் தொடரில் கெய்ரோன் பாவெல், டி20 தொடரில் நிக்கோலஸ் பூரான் ஆகியோர் இடம்பிடிப்பார் கள் என்று வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. லெவிஸ், ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையா டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.