விளையாட்டு

52 ஆண்டுகளுக்குப் பிறகு யூரோ கோப்பையை கைப்பற்றியது இத்தாலி

52 ஆண்டுகளுக்குப் பிறகு யூரோ கோப்பையை கைப்பற்றியது இத்தாலி

webteam

யூரோ கால்பந்து இறுதிப்போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் இங்கிலாந்தை வீழ்த்தி இத்தாலி சாதனை படைத்துள்ளது.

16-ஆவது யூரோ கால்பந்து தொடரின் சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி லண்டலில் உள்ள வெம்ப்லே மைதானத்தில் நடைபெற்றது. சொந்த மண்ணில் களமிறங்கிய இங்கிலாந்து அணியானது இத்தாலியை எதிர்கொண்டது. போட்டி தொடங்கியதும் 2-ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து அணி கோல் அடித்து இத்தாலிக்கு அதிர்ச்சி அளித்தது. அந்த அணியின் லூக் ஷா அடித்த இந்த கோல், யூரோ கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் வேகமாக அடிக்கப்பட்ட கோல் என்ற சாதனையை படைத்துள்ளது.

ஆனால் அடுத்த 5 நிமிடத்தில் கிடைத்த ப்ரி கிக் வாய்ப்பை இத்தாலி அணி வீரர் தவறவிட்டார். இரண்டாம் பாதி ஆட்டத்தின் 67-ஆவது நிமிடத்தில் இத்தாலி அணி வீரர் லியோனர்டோ போனுக்சி பதில் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமநிலைக்கு வந்தது. அதன்பின்னர் இரு அணி வீரர்கள் கோல் அடிக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் பலனளிக்காமல் போனது. பின்னர் கூடுதல் நேரத்திலும் இரு அணி வீரர்கள் கோல் அடிக்கவில்லை.

வெற்றியை தீர்மானிக்க பெனால்ட்டி ஷூட் அவுட் முறை பயன்படுத்தப்பட்டது. இதில் 3-2 என்ற கோல் கணக்கில் இத்தாலி அணி வெற்றிபெற்று யூரோ கோப்பையை உச்சி நுகர்ந்தது. சொந்த மண்ணில் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி வீரர்கள் சோகக் கண்ணீரில் மூழ்கினர்.மறுபுறமோ இத்தாலி அணியினர் ஆனந்த கண்ணீரில் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி உற்சாக மிகுதியில் துள்ளிக்குதித்தனர்.

இத்தாலி அணி ரசிகர்கள் மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மகுடம் சூட்டியுள்ள இத்தாலி அணிக்கு கோப்பையுடன் இந்திய மதிப்பில் 89 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. 1968ஆம் ஆண்டுக்கு பிறகு இரண்டாவது முறையாக இந்தாண்டு யூரோ கோப்பை கால்பந்து சாம்பியன் கோப்பையை இத்தாலி தன்வசமாக்கியுள்ளது.