வங்கதேசம் vs இங்கிலாந்துக்கு முகநூல்
விளையாட்டு

நியூஸி அணியிடம் படுதோல்வி; வங்கதேசத்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவுசெய்யுமா இங்கிலாந்து?-ஓர் அலசல்

வங்கதேசம், இங்கிலாந்துக்கு இடையேயான உலக கோப்பை 2023, ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெற இருக்கின்றது.

Viyan

2023 உலகக் கோப்பையில் இதுவரை:

இங்கிலாந்து:

நடப்பு சாம்பியனாக உலகக் கோப்பையைத் தொடங்கிய இங்கிலாந்து முதல் போட்டியிலேயே நியூசிலாந்திடம் படுதோல்வி அடைந்தது. முதலில் பேட் செய்து 282 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து அணி, நியூசிலாந்தின் ஒரேயொரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்த முடிந்தது. 36.2 ஓவர்களிலேயே இலக்கை செஸ் செய்தது பிளாக் கேப்ஸ். மோசமான ரன் ரேட்டால் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது நடப்பு சாம்பியன்.

இங்கிலாந்து

வங்கதேசம்:

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தங்கள் முதல் போட்டியை வென்று சிறப்பாக இத்தொடரைத் தொடங்கியிருக்கிறது. ஆப்கானிஸ்தானை 156 ரன்களுக்குள் சுருட்டிய வங்கதேசம், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 விக்கெட்டுகள் வீழ்த்தியது அரைசதமும் அடித்த மெஹதி ஹசன் மிராஜ் ஆட்ட நாயகன் விருது வென்றார். ஓரளவு நல்ல ரன்ரேட்டில் வென்றிருக்கும் அந்த அணி புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறது.

வங்கதேசம்:

ஸ்டோக்ஸ் விளையாடுவது சந்தேகம்:

நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் முழுமையான ஃபிட்னஸில் இல்லாததால் பென் ஸ்டோக்ஸ் விளையாடவில்லை. இரண்டாவது போட்டியில் அவர் ஆடுவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் இன்னும் முழு உடல் தகுதியோடு இல்லை என்று தெரிகிறது. தரம்சாலாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவர், நெட் செஷனில் ஸ்பின்னர்களுக்கு எதிராக அதிக நேரம் பயிற்சி செய்திருக்கிறார். இருந்தாலும் அந்த சமயத்தில் அவர் மிகவும் சிரம்பட்டிருக்கிறார். அதனால் நிச்சயம் இங்கிலாந்து அணி அவர் விஷயத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பாது.

வங்கதேசத்தை விட ஆபத்தான அணிகள் இதன்பிறகு அணிவகுக்கவிருப்பதால், இங்கிலாந்து அவருக்கு கூடுதல் ஓய்வு கொடுக்கவே விரும்பும்.

ஜோ ரூட்

முதல் போட்டியில் ஜோ ரூட் தவிர எந்த இங்கிலாந்து பேட்ஸ்மேனுமே பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. ஆனால் எல்லோருக்குமே ஒரு தொடக்கம் கிடைத்தது. இம்முறை அதேபோல் விளையாடாமல் அந்த அணியின் டாப் ஆர்டர் கொஞ்சம் பெரிய பார்னர்ஷிப்கள் அமைக்க விரும்பும். அதேபோல், பந்துவீச்சும் கொஞ்சம் சுமாராகவே இருந்தது. இந்தப் போட்டியில் ஜாஸ் பட்லர், லியம் லிவிங்ஸ்டன், ஜோ ரூட் ஆகியோரை பந்துவீச்சில் பயன்படுத்தவேண்டும். இந்த ஆடுகளம் அவர்களுக்கு உதவலாம்.

வெற்றி நடையைத் தொடருமா வங்கதேசம்!

வங்கதேச அணி முதல் போட்டியில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. அவர்கள் ஸ்பின்னர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள். இந்த மைதானத்தில் தான் அந்தப் போட்டியும் நடந்தது என்பதால், வங்கதேச அணிக்கு அது கூடுதல் சாதகமாக இருக்கும். பெரும் தோல்வியோடு இப்போட்டிக்குள் வரும் இங்கிலாந்துக்கு இது சவாலாகத்தான் இருக்கும்.

2015 உலகக் கோப்பையில் இங்கிலாந்தை தோற்ற வரலாறு இருப்பதால், அதை மீண்டும் அரங்கேற்ற அந்த அணி ஆவலாக இருக்கும். ஷகிப் அல் ஹசன், மெஹதி ஹசன் மிராஜ் போன்ற நட்சத்திர ஆல்ரவுண்டர்கள் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது அதற்கான நம்பிக்கையை அதற்குக் கொடுக்கும்.

மைதானம் எப்படி?

ஹிமாச்சல் பிரதேஷ் கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம்

போட்டி நடக்கும் ஹிமாச்சல் பிரதேஷ் கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம் முதல் போட்டியில் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருந்தது. இந்தப் போட்டியிலும் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகவே அந்த ஆடுகளம் இருக்கக்கூடும். ஆடுகளத்தை விட அதிகம் பேசப்பட்டது இந்த மைதானத்தின் outfield பகுதி. பௌண்டரி எல்லைக்கு அருகிலான பகுதிகள் மிகவும் மோசமான இருந்ததால் கடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் முஜீப் உர் ரஹ்மான் இடறி சறுக்கியது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்தப் போட்டிக்கு முன்பாகவும் மைதானம் பற்றி இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் பெரும் விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.

ஆப்கானிஸ்தான் பயிற்சியாளரும், முன்னாள் இங்கிலாந்து வீரருமான ஜானதன் டிராட் மைதானத்தின் நிலை குறித்து இங்கிலாந்து வீரர்களை எச்சரித்திருக்கிறார். ஏதேனும் வீரர் காயமடைந்தால் அது மிகப் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும்.

கவனிக்கப்படவேண்டிய வீரர்கள்:

இங்கிலாந்து - ஜோ ரூட்: தரம்சாலா ஆடுகளத்தில் வங்கதேச ஸ்பின்னர்களை எதிர்கொள்வது கொஞ்சம் சிக்கலான விஷயம் தான். அதனால் ஜோ ரூட்டின் இன்னிங்ஸ் இங்கிலாந்துக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் அவரது ஆஃப் ஸ்பின்னும் பெரும் தாக்கம் ஏற்படுத்தலாம்.

வங்கதேசம் - ஷகிப் அல் ஹசன்: முதல் போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய வங்கதேச கேப்டன், இந்தப் போட்டியிலும் அதைத் தொடரக்கூடும். அதேசமயம் தன் டிரேட்மார்க் இன்னிங்ஸை பேட்டிங்கில் அவர் காட்டினால், நிச்சயம் இங்கிலாந்துக்கு சவாலளிக்க முடியும்.

போட்டி 7: வங்கதேசம் vs இங்கிலாந்து

மைதானம்: ஹிமாச்சல் பிரதேஷ் கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம், தரம்சாலா

போட்டி நடக்கும் நேரம்: அக்டோபர் 10, காலை 10.30 மணி