இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. ஏற்கனவே 2 போட்டிகளையும் இங்கிலாந்து அணி வென்று 2-0 என்ற நிலையில் தொடரை ஏற்கனவே தனதாக்கி இருந்தது. இந்நிலையில் ஆறுதல் வெற்றியை நோக்கி நியூசிலாந்து களமிறங்கிய 3வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
முதல் இன்னிங்சில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் டாப் ஆர்டரை இங்கிலாந்து பவுலர்கள் துவம்சம் செய்தனர். கேப்டன் கேன் வில்லியம்சனை தவிர மற்ற அனைத்து டாப் ஆர்டர் பேட்டர்களையும் 30 ரன்களுக்குள் வழியனுப்பி வைத்தனர். இதையடுத்து டேரில் மிட்சலின் சதம், டாம் ப்ளெண்டலில் அரைசதத்தின் உதவியுடன் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையிலும் 329 என்ற கவுரவமான ஸ்கோரை எட்டியது நியூசிலாந்து அணி. இங்கிலாந்தின் ஜேக் லீச் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்தின் சரிவுக்கு வித்திட்டார்.
அடுத்து களமிறங்கிய இங்கிலாந்துக்கும் அதே துவக்க அதிர்ச்சி காத்திருந்தது. முதலில் களமிறங்கிய 3 பேட்டர்களையும் ஒற்றை இலக்கத்தை தாண்டுவதற்குள் அவுட்டாக்கி அதிர்ச்சி அளித்தார் ட்ரெண்ட் போல்ட். இதையடுத்து களமிறங்கிய பேர்ஸ்டோ பொறுமையாக விளையாடி சதம் விளாச, ஜேமி ஓவர்டன் தன் பங்குக்கு 97 ரன்களை சேர்த்து 3 ரன்களை சதத்தை தவறவிட்டு வெளியேறினார். முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி 360 ரன்களை குவித்தது.
31 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை துவக்கிய நியூசி. அணி டாம் லதாம், டேரில் மிட்செல், டாம் ப்ளெண்டல் ஆகியோரின் அரைசதங்களால் 326 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 296 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி வழக்கமான டெஸ்ட் பாணியை கைவிட்டு “ஒருநாள் கிரிக்கெட்” பாணியை கையில் எடுத்தது. பவுண்டர், சிக்ஸர்களாக பறக்க துவங்கியதால் நியூசி. பவுலர்கள் கலக்கம் அடைந்தனர்.
டிராவை நோக்கி நியூசி. அணி நகர்த்த முயன்ற போதிலும் ஒல்லி போப், பேர்ஸ்டோ, ஜோ ரூட் ஆகிய மூவரில் அரைசதத்தால் 7 விக்கெட்டுகளை மீதம் வைத்து வெற்றி இலக்கை எட்டியது இங்கிலாந்து அணி. இதன்மூலம் 3-0 என்ற கணக்கில் நியூசி அணியை ஒயிட்வாஷ் செய்து வரலாறு படைத்தது. 9 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் பல டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஒயிட்வாஷ் செய்து இங்கிலாந்து சாதனை படைத்துள்ளது.