பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே ராவல்பிண்டி மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து புகழ்பெற்ற வெற்றியைப் பெற்றநிலையில், இந்த ஒரே ஒரு போட்டி வரலாற்று பக்கங்களில் பல சாதனைகளை மீண்டும் எழுதியுள்ளது.
2015ஆம் ஆண்டிற்கு பிறகு இங்கிலாந்து அணி அவர்களது ஆட்டத்தின் அணுகுமுறையை அதிரடி ஆட்டத்திற்கு திருப்பிய பிறகு, ஒருநாள் - டி20 -டெஸ்ட் என மூன்று வடிவத்திலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது. ஒருநாள் உலக்கோப்பை, டி20 உலகக்கோப்பை என தொடர்ந்து 2 உலகக்கோப்பை கைப்பற்றி அசத்தியிருக்கும் இங்கிலாந்து டெஸ்ட் கோப்பைக்கான அடித்தளத்தை போட ஆரம்பித்து இருக்கிறது. இங்கிலாந்து அணியின் இந்த அணுகுமுறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் கொண்டுபோய் நிறுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
17 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு முதல் டெஸ்ட்!
17 வருடங்கள் கழித்து பாகிஸ்தானில் நடைபெறும் டெஸ்ட் தொடருக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி, ராவல்பிண்டியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் எட்டக்கூடிய இலக்கை நிர்ணயித்து எல்லோருக்கும் அதிர்ச்சியளித்த நிலையில், 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
வரலாற்றில் ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவிப்பு!
இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் மொத்தமாய் 1768 ரன்கள் குவிக்கப்பட்டது. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 657 ரன்கள் எடுத்தது, அதே நேரத்தில் பாகிஸ்தான் அணி 579 ரன்கள் எடுத்தது. பின்னர் 3 லயன்ஸ் என அழைக்கப்படும் இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் 264 ரன்களைக் சேர்த்தது. 2ஆவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் 268 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இவ்விரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது, இதுவரையிலான ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த போட்டியாக மாறியது. இதற்கு முன் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 1921ல் மோதிய போது ஒரு போட்டியில் 1753 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டு புதிய சாதனையை நிகழ்த்தி காட்டியுள்ளன இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள்.
இரு அணிகளும் விக்கெட்டே இழக்காமல் 200 ரன்களை கடந்து சாதனை!
போட்டியின் தொடக்க நிலைக இரண்டு அணிகளிலும், இரண்டு முறை 200 ரன்கள் அடிக்கப்பட்ட ஒரே போட்டியாகவும் இந்த டெஸ்ட் போட்டி மாறியுள்ளது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்தின் ஜாக் க்ராவ்லி மற்றும் பென் டக்கெட் ஜோடி 233 ரன்கள் எடுத்த நிலையில், பதிலடி கொடுத்த பாகிஸ்தான் ஜோடியான இமாம்-உல்-ஹக் மற்றும் அப்துல்லா ஷபீக் ஜோடியும் முதல் இன்னிங்சில் முதல் விக்கெட்டுக்கு 225 ரன்கள் குவித்தது.
முதல் இன்னிங்ஸ்களில் 4 தொடக்க வீரர்கள் 100 அடித்து சாதனை!
இரண்டு அணிகளின் முதல் இன்னிங்சிலும் களமிறங்கிய நான்கு தொடக்க ஆட்டக்காரர்களும் சதம் அடித்த ஒரே போட்டியும் இந்தப் போட்டிதான். சாக் க்ராலி மற்றும் பென் டக்கெட் முறையே 122 மற்றும் 107 ரன்களும், இமாம்-உல்-ஹக் மற்றும் அப்துல்லா ஷபீக் முறையே 121 மற்றும் 114 ரன்களும் எடுத்து அசத்தினர்.
முதல் நாளில் 500 ரன்கள் குவிப்பது இதுவே முதல் முறை!
ஒரு டெஸ்ட் போட்டியின் தொடக்க நாளில் அதிக ரன்களை அடித்த அணி என்ற பெருமையை இங்கிலாந்து கிரிக்கெட் அணி அவர்களது பெயரை வரலாற்று புத்தகத்தில் எழுதி உள்ளது. ராவல்பிண்டி டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இதற்கு முன்னர் இலங்கை அணி எடுத்த 494 ரன்களை விட, இங்கிலாந்து அணி 506 ரன்கள் குவித்து சாதனை.
ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அதிக சதங்கள்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே நாளில் அதிக சதம் அடித்த வீரர்கள் என்ற சாதனையையும் இங்கிலாந்து வீரர்கள் படைத்துள்ளனர். சாக் க்ராலி, பென் டக்கெட், ஒல்லி போப் மற்றும் ஹாரி புரூக் ஆகியோர் பிளாட் பிட்சான ராவல்பிண்டி ஆடுகளத்தில் 4 சதங்களை அடித்து விளாசினர். அவர்கள் இப்போது ஒரே நாளில் அதிக சதங்கள் எடுத்த சாதனையையும் படைத்துள்ளனர்.
ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் செஸ்ஸனில் அதிக ரன்கள்!
பொதுவாகவே ஒவ்வொரு டெஸ்ட் போட்டியின் போதும் முதல் இன்னிங்ஸானது ஆட்டத்தை செட் செய்ய பொறுமையாகவே ஆடப்படும், அதனால் எப்போதும் முதல் செஸ்ஸனை விட 3ஆவது செஸ்ஸனில் தான் அதிக ரன்கள் கிடைக்கபெறும். இந்நிலையில் இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் செஸ்ஸனிலேயே அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து அணி, அந்த சாதனையை தற்போது படைத்துள்ளது. முதல் நாள் ஆட்டத்தில் அவர்கள் 174 ரன்கள் எடுத்தனர்.