இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் டோம் சிப்ளே, ஜாக் கிராவ்லி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நாட்டிங்கம்மில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதனையடுத்து லார்ட்ஸில் நடைபெற்ற 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடி வெற்றிப் பெற்றது. இந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் தொடக்க ஆட்டக்காரரான டோம் சிப்ளே சிறப்பான பங்களிப்பை அளிக்கவில்லை. அதேபோல முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய கிராவ்லியும் போதிய ரன்களை குவிக்கவில்லை.
இதனையடுத்து இந்தியாவுக்கு எதிராக எஞ்சியுள்ள 3 டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இருந்து இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். இதில் தொடக்க வீரர் டோம் சிப்ளேவுக்கு பதிலாக டேவிட் மலான் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கும் டேவிட் மலானுக்கு 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல இளம் வேகப்பந்து வீச்சாளர் சகிப் முகமதுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் அண்மையில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற டி20, ஒருநாள் போட்டியில் சிறப்பாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.