விளையாட்டு

ஆதிக்க மனோபாவமா, ஆணவமா? - இங்கிலாந்து வீரர்களுக்கு 'ஆப்பு' வைக்கும் பழைய ட்வீட்டுகள்

ஆதிக்க மனோபாவமா, ஆணவமா? - இங்கிலாந்து வீரர்களுக்கு 'ஆப்பு' வைக்கும் பழைய ட்வீட்டுகள்

jagadeesh

"முன் செய்த பாவம் பின் தொடரும்" என்று சான்றோர் சொன்ன வாக்கு யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, இப்போது இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு நன்றாகவே பொருந்தி போகிறது என்றுதான் சொல்ல வேண்டும். "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்ற வார்த்தைக்கு ஏற்ப இங்கிலாந்து வீரர்களுக்கு இப்போது நிகழ்ந்து வருகிறது. முன் எப்போதோ இங்கிலாந்து வீரர்கள் பதிவிட்ட சில ட்வீட்டுகள் இப்போது அவர்களுக்கு பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. ஆம் விளையாட்டாக போட்ட ட்வீட்களா அல்லது உள்நோக்கம் கொண்டவையா என்ற விசாரணையை தொடங்கி இருக்கிறது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்.

கடந்த வாரம் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டி டிராவில் முடிவடைந்தாலும், பெரும் பரபரப்பு மைதானத்துக்கு வெளியே நடந்து கொண்டிருந்தது. அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக அறிமுக வீரராக களமிறங்கினார்  பந்துவீச்சாளர் ஓலி ராபின்சன். முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் ராபின்சன். ஆனால் அவரின் மகிழ்ச்சி அன்றைய நாள் முழுவதும் கூட நீடிக்கவில்லை. ராபின்சன் குறித்த சர்ச்சை ட்விட்டரில் வெடித்தது.

அதற்கு காரணம் அவர் 8 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட ட்வீட் என தெரியவந்தது. 8 வருடங்களுக்கு முன்பு சில ட்வீட்களை வெளியிட்டிருந்த ராபின்சன், அதில் இனவெறியைத் தூண்டும் விதமாகவும், பாலியல் ரீதியாக சில வார்த்தைகளையும் பதிவு செய்திருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் பலர் இனவெறி பிடித்த ராபின்சனை அணியிலிருந்து உடனே நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக, ராபின்சன் கூறிய விளக்கத்தை ஏற்காத இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அவரது இந்த ட்வீட்டுகள் குறித்து நடவடிக்கை எடுக்க சில ஆய்வுகளையும் மேற்கொண்டது.

இதனையடுத்து ஓலி ராபின்சன் ட்வீட் போட்டது உறுதியாகி உள்ளதால் அவரது மன்னிப்பை நிராகரித்து அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் 7 மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தப் பிரச்னை ராபின்சனோடு நிற்காததுதான் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு தலைவலியாக உள்ளது. ஆம், சமூகவலைத்தளவாசிகள் மேலும் சில இங்கிலாந்து வீரர்களின் பழைய ட்வீட்டுகளை ஆராய ஆரம்பித்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு ஊடக வெளிச்சம் குறைவாக இருந்த காலத்தில் போட்ட ட்வீட்டுகள் இப்போது "ரிவீட்டுகள்" ஆக இங்கிாலந்து வீர்களுக்கு மாறியுள்ளது.

இதனையடுத்து இங்கிலாந்து அணியின் முன்னணி பந்துவீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் 11 ஆண்டுகளுக்கு முன்பு பதிவிட்ட ட்வீட் ஒன்று பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் சக பந்துவீச்சாளரான ஸ்டுவர் பிராடை லெஸ்பியன் போல இருப்பதாக ட்விட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார். இதனை ரசிகர்கள் தோண்டி எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட, அதனையும் தீவிரமாக விசாரித்து வருகிறது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். இதில் வேடிக்கை என்னவென்றால் தோண்ட தோண்ட வெளியே வரும் புதையல் போல பல முக்கிய வீரர்களின் சர்ச்சைக்குரிய ட்வீட்கள் வெளியே வெளியே வர தொடங்கி இருக்கின்றன.

இதேபோல 4 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கனும், ஜோஸ் பட்லரும் இந்தியர்களின் ஆங்கில பேச்சை கிண்டல் செய்யும் விதமாக ட்வீட்டுகளை தொடர்ந்து பதிவிட்டு வந்தனர். அதாவது இந்தியர்கள் வழக்கத்தில் பேசும் ஆங்கிலத்தை கிண்டல் செய்து பேசிக் கொண்டது தெரிய வந்துள்ளது. இதுவும் இனவெறிதான் என ரசிகர்கள் கொந்தளித்து அந்தப் பதிவுகளையும் பகிர்ந்து வருகின்றனர். இதில் மார்கனும், ஜோஸ் பட்லரும் ஐபிஎல்லில் விளையாடுவதால் இது இவர்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அதவும் மார்கன் கொல்கத்தா அணியின் கேப்டனாகவும் இருக்கிறார்.

"பொதுவாகவே இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு நிற மற்றும் இன வெறிப் பாகுபாடு உண்டு. அதில் ஒரு சிலர் மட்டுமே விதிவிலக்கு. அதிலும் இங்கிலாந்து வீரர்களுக்கு ஆதிக்க மனோபாவம் அதிகம். அது அவர்கள் ரத்தத்திலேயே ஊறியிருக்கிறதா என தெரியவில்லை. அவர்கள் அதிலிருந்து வெளியே வந்தால் அவர்களின் எதிர்காலத்துக்கு நல்லது" என்றார் நம்மிடம் பேசிய பெயர் குறிப்பிட விரும்பாத தமிழக கிரிக்கெட் வீரர். இப்போது இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களின் எதிர்காலம் ட்விட்டரில் பதிவிடப்பட்ட "இறந்தகாலத்தை" நம்பிதான் இருக்கிறது.

- ஆர்.ஜி.ஜெகதீஷ்