இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே சவுத்தாம்டன் நகரில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் 3ஆம் நாளான இன்று மழை பெய்வதற்கான வாய்ப்பு 50 சதவீதம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுத்தாம்டனில் நடைபெற்று வரும் இந்தப்போட்டியில் முதல்நாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. 2 ஆவது நாளில், டாஸ் வென்ற நியுசிலாந்து அணி இந்திய அணியை பேட் செய்யக் கேட்டுக் கொண்டது. இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் ஷர்மா, சுப்மான் கில் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்தனர்.
ரோகித் ஷர்மா 34 ரன்களிலும், சுப்மான் கில் 28 ரன்களிலும் அடுத்தடுத்த விக்கெட்டை இழந்தனர். புஜாரா 8 ரன்களில் பெவிலியன் திரும்பினர். நாளின் இறுதியில் கேப்டன் விராட் கோலி 44 ரன்களுடனும், அஜிங்க்ய ரஹானே 29 ரன்களிலும் களத்தில் உள்ளனர். நேற்றையப் போட்டியில் மழை குறுக்கீடு இல்லை என்றாலும் மைதானத்தில் போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் 3-ஆம் நாளான இன்று சவுத்தாம்டனில் மழை இருக்குமா போட்டி தொடருமா என கேள்வி எழுந்துள்ளது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சவுத்தாம்டனில் லேசான தூறல் மட்டுமே இருந்து வருகிறது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்பாக வானிலை சீராகிவிடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமை 50 சதவீதம் மழை பொழிவுக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.