இந்திய அணியின் சிறந்த கேப்டன்களுள் ஒருவராகக் கருதப்படும் மகேந்திரசிங் தோனி, கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தோனியின் தலைமையில் இந்திய அணி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளைப் புரிந்துள்ள நிலையில் அவரது கிரிக்கெட் பயணத்தில் மறக்க முடியாத பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
2007 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி
இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையே நடைபெற்ற 2007 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 157 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் அணி கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில் பாகிஸ்தான் அணி வீரர் மிஸ்பா அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் ஸ்ரீசாந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதையடுத்து இந்திய அணி முதல் டி20 உலககோப்பையை கைப்பற்றியது. தோனியின் கிரிக்கெட் பயணத்தில் இது ஒரு முக்கிய நிகழ்வு.
2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டி
இந்தியா- இலங்கை இடையே நடைபெற்ற 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 157 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். போட்டியின் இறுதியில் சிக்சர் விளாசி இந்திய அணி கோப்பையை வெல்ல காரணமாக இருந்த தோனியின் அந்த தருணத்தை கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கவே முடியாது.
2013 சாம்பியன்ஸ் டிராபி இறுதிச் சுற்று
இந்தியா-இங்கிலாந்து இடையே நடைபெற்ற இறுதிப் போட்டியில் 130 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை என்ற நிலையில் அஷ்வினின் சிறந்த பந்து வீச்சால் வெற்றி இலக்கை அடைய முடியாமல் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியது.
2013 முத்தரப்புப் போட்டி
இந்தியா- இலங்கை இடையே நடைபெற்ற இறுதிப்போட்டியில் 202 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி தோனியின் நிதானமான ஆட்டத்தால் 49.4 ஓவரில் வெற்றி இலக்கை எட்டி கோப்பையை வென்றது. தோனி வழக்கம் போல கடைசி பந்தில் சிக்சர் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
2016 டி20 ஆசிய கோப்பை இறுதிப்போட்டி
இந்தியா-வங்கதேசம் இடையே நடைபெற்ற இறுதிப் போட்டி மழை காரணமாக 15 ஓவராகக் குறைக்கப்பட்ட நிலையில் ஆட்டத்தின் 13.5 ஓவரில் வெற்றி இலக்கை எட்டி கோப்பையை கைப்பற்றியது. வழக்கம் போல தோனி சிக்சர் விளாசி ஆட்டத்தை முடித்தார்.