களத்தில் அமைதியாக இருப்பதுதான் தோனியின் மிகப் பெரிய சிறப்பு என்று முன்னாள் நடுவர் சைமன் டாஃபிள் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த நடுவர்களில் ஒருவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த சைமன் டாஃபிள். இவர் கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக செயல்படுவதிலிருந்து 2012-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவர் நடுவராக செயல்பட்டபோது 2004-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக ஐந்து முறை ஐசிசியின் சிறந்த நடுவர் என்ற விருதை பெற்றுள்ளார். இந்நிலையில் தற்போது இவர் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.
இந்தப் புத்தகம் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் இவரிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான தோனி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர், “எனக்கு தோனியை நிறைய விஷயங்களில் பிடிக்கும். நடுவருக்கு ஒத்துழைப்பு அளிக்கும் மிகச் சிறந்த கேப்டன் தோனி. அவருக்கு சிறப்பான கிரிக்கெட் மூளை உண்டு. அதை வைத்து அவர் சரியான நேரத்தில் சிறப்பான நுணுக்கங்களை பயன்படுத்தி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்வார்.
குறிப்பாக 2013-ஆம் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் நான் நடுவராக இருந்தேன். அந்தப் போட்டியில் தோனி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அப்போது அவர் கடினமான சூழ்நிலைகளில், கேப்டன் முன்னே நின்று அணியை எவ்வாறு வழி நடத்துவார் என்பதை சிறப்பாக செய்து காட்டினார். மேலும் தோனியின் மிகச் சிறந்த குணமே அவர் ஆடுகளத்தில் அமைதியாக இருப்பதுதான். அவரின் உள் மன அமைதி அவரை உரிய நேரத்தில் சிறப்பான முடிவுகளை எடுக்கவைக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.