இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்கும் தோனியின் கனவு நிறைவேறாமல் போகலாம் என்று கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்லே தெரிவித்துள்ளார்.
38 வயதான மகேந்திர சிங் தோனி உலகக் கோப்பை தொடருக்கு பிறகு எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை. அதனால், அவர் அடுத்ததாக எந்தப் போட்டியில் விளையாடப் போகிறார் என்று அவரது ரசிகர்கள் ஏக்கத்தில் உள்ளனர். ஐபிஎல் போட்டிகளிலாவது அவர் விளையாடுவார் என்று பார்த்தால் அதுவும் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்தாண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் தோனிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், “டி20 உலகக் கோப்பைக்கான போட்டியில் தோனி இடம்பெற வேண்டும் என நான் நிச்சயமாக விரும்புகிறேன். ஆனால், அது நடைபெற பெரும்பாலும் வாய்ப்பில்லை என்றே தெரிகிறது" என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கிரிக்கெட் விமர்சகரும் வர்ணனையாருமான ஹர்ஷா போக்லே "கிரிக்பஸ்" இணையதளத்துக்கு அளித்துள்ள பேட்டியில் "தோனியின் இந்தியக் கனவுகள் முடிந்துவிட்டதாக நினைக்கிறேன். டி20 உலகக் கோப்பை நடக்கும் செப்டம்பர் - அக்டோபரை தோனி குறிவைக்கவில்லை என நினைக்கிறேன். ஒருவேளை அவருக்கு ஐபிஎல் பிரமாதமாக அமைந்திருந்தால் அதற்கு வாய்ப்பிருந்திருக்கும். ஆனால் அந்த நிலைமை தற்போது கடந்துவிட்டது என நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.