"12 வருஷம் ஆச்சு, ஆனா இன்னும் தோனி அடிச்ச அந்த வின்னிங் சிக்சும், “Dhoni finishes off in style, A magnificent strike into the crowd, India lifts the World Cup after 28 years" என டெலிவிஷனில் ஒலித்த ரவி சாஸ்திரியின் குரலும், ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகனின் மனதிற்குள்ளும் இன்றளவும் மறக்க முடியாத ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையாகாது.
இதுதான் இன்று காலையில் இருந்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் பேசப்படும் பொருளாக மாறியிருக்கிறது. ஆம், இதே தேதியில்தான் 12 ஆண்டுகளுக்கு முன்பு தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. அதற்கு முன்பு, 1983ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் உலகக் கோப்யை வென்று அசத்தியிருந்தது.
பின்னர் பல இந்திய கேப்டன்கள் மாறி மாறி வந்தாலும் ஐசிசியின் உலகக்கோப்பையை கையில் ஏந்தி முத்தமிட முடியவில்லை. 2003ஆம் ஆண்டு அடைந்த பெரிய உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு ஏமாற்றத்தையே சந்தித்து வந்த இந்திய அணி, 28 ஆண்டுகள் கழித்து தான் தன்னுடைய உலகக் கோப்பை கனவை பூர்த்தி செய்துகொள்ள முடிந்தது. 2011ல் கோப்பையை இந்திய அணி ஏந்திய தருணத்தின் போது மைதானத்தில் இருந்த இந்திய வீரர்கள் கண்ணீர் சிந்திய அதே நேரத்தில், ஸ்டேடியத்தில் நிரம்பியிருந்த மக்கள் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் இந்தியா மற்றும் இலங்கை அணியின் இறுதிப்போட்டியை பார்த்துக்கொண்டிருந்த ஒவ்வொரு இந்திய ரசிகரின் கண்களிலும் கண்ணீர் ததும்பி இருந்தது என்றால் பொய்யாகாது. அந்தளவு ஒவ்வொரு இந்திய மக்களின் நெஞ்சிலும் அந்த தருணமானது இன்னமும் பசுமரத்தாணி போல் பதிந்துள்ளது.
1983-க்கு பின்னர் ஒவ்வொரு உலகக் கோப்பை போட்டிகளிலும் இந்திய அணி சாம்பியன் ஆக வேண்டும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர். ஆனால் 21 வருடங்களுக்கு பின்னர் தான் அந்த எதிர்பார்ப்பு நிறைவேறியது. 2007-ஆம் ஆண்டில் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பையை வென்று இந்திய அணியை நிமிர வைத்தார் தோனி.
அதன் பிறகான இந்திய நிர்வாகம், இந்திய கேப்டன் தோனியுடன் இணைந்து ஒருநாள் உலகக்கோப்பைக்கான அணியை கட்டமைப்பதில் பெரிய மெனக்கெடல் செய்தது. அது மூத்த வீரர்கள், திறமையான வீரர்கள் என எந்த அடிப்படையிலும் கருணையை காட்டாமல், உலகக்கோப்பையை வெல்ல எந்த வீரர்கள் வேண்டுமோ அவர்களை முன்கூட்டியே தீர்மாணித்து, அவர்களை அதற்காக தயார்படுத்தும் வேலையில் இறங்கியது. பல வீரர்கள் வாய்ப்பு மறுக்கப்பட்டதற்காக விமர்சனங்களை வைத்தாலும், நாங்கள் உங்களுக்கு கோப்பையை பரிசளிக்க போகிறோம், பொறுத்திருந்து பாருங்கள் என்பது போல அமைதியையே கடைசிவரை கடைபிடித்தது இந்திய நிர்வாகம் மற்றும் தோனி தரப்பு.
2011ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கான இந்திய அணியானது அனுபவமும், விவேகமும், வேகமும் கொண்ட மூத்த மற்றும் இளைஞர்கள் கொண்ட அணியாக நிரம்பியிருந்தது. உலகக் கோப்பைக்கான அந்த அணியில் சேவாக், சச்சின், யுவராஜ் சிங், ஜாகிர், காம்பீர், கோலி, ஹர்பஜன் சிங், தோனி என தலைசிறந்த வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். ஒவ்வொரு போட்டியின் போதும் ஒவ்வொரு மேட்ச் வின்னர்கள் இந்திய அணிக்கு கிடைத்தனர். ஒரு போட்டியில் ஒருவருக்கு ஆட்டம் சரியாக அமையாவிட்டால், அந்த போட்டியில் இன்னொருவர் ஆட்டநாயகனாக மாறினார். அப்படி தான் பவுலர்கள் விக்கெட் எடுக்காத போது, ஆல்ரவுண்டர்கள் விக்கெட் டேக்கராக மாறினர். டாப் ஆர்டர்கள் பேட்டிங் செய்யாத போது, மிடில் ஆர்டர் பேட்டர்கள் போட்டியின் இறுதிவரை நிலைத்து நின்று பேட்டிங் செய்து வெற்றியை பரிசளித்தனர்.
2011 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் குரூப் ஆட்டத்தில் மட்டும் தென்னாப்பிரிக்க அணியுடன் தோல்வியுற்ற இந்திய அணி காலிறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. ஆனால் நாக்அவுட் போட்டிகளில் தான் இந்திய அணிக்கு பெரிய சவாலே நிரம்பியிருந்தது. நாக்அவுட் போட்டி என்றாலே எப்போதும் இந்தியாவிற்கு எமனாக வந்துநிற்கும் ஆஸ்திரேலிய அணியையே காலிறுதியில் எதிர்கொண்டது இந்திய அணி. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்திய அணி, சச்சின் மற்றும் யுவராஜ் சிங்கின் பிரமாதமான ஆட்டத்தின் பலனாக வெற்றிப்பெற்று, அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றது.
ஒரு கண்டத்தை தாண்டிவிட்டோம் என்றால் அரையிறுதியில் வந்து நின்றது கிரிக்கெட் உலகின் பரம எதிரியான பாகிஸ்தான் அணி. பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான அரையிறுதிப்போட்டிக்கு இந்திய, பாகிஸ்தான் ரசிகர்களுக்கு இடையே மட்டுமல்லாமல், பாகிஸ்தான் மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையேயும் பெரும் பரபரப்பு நிலவியது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீஃப் ஆகியோர் முழு போட்டியையைும் நேரில் வந்து கண்டுகளித்தனர். ஆனால், அரையிறுதியிலும் இந்தியா தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி பாகிஸ்தானை வென்று உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
முத்தையா முரளிதரன், ஜெயவர்த்தனே, சங்ககரா, லசித் மலிங்கா போன்ற நட்சத்திர வீரர்கள் நிரம்பிய இலங்கை அணி பலமான அணியாகவே தெரிந்தாலும், இந்தியாவில் நடக்கும் போட்டியில் இந்தியாவின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் மும்பையில் நடந்த இறுதிப் போட்டியில் இலங்கை அணியை எளிதாக இந்தியா வென்று விடும் என்ற எதிர்பார்ப்பு தான் அனைவரிடமும் இருந்தது.
சாலைகள் வெறிச்சோடி போய் அனைவரும் டி.வி.யின் முன்புறம் அமர, பல தனியார் நிறுவனங்கள் பணியாளர்களுக்கு விடுப்பு அளித்தது. ஆனால், போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இலங்கை அணி ஜெயவர்தனே சதத்துடன் 274 ரன்களை எடுத்ததும் அனைவரின் எதிர்பார்ப்பிலும் கல் விழுந்தது. உள்ளூரில் தானே நடக்கிறது வெற்றி இலக்கை எப்பாடுபட்டாவது இந்தியா அடைந்து விடும் என இந்திய ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்கும் நேரத்தில், இந்தியா தனது முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் சேவாக் விக்கெட்டை பறிகொடுத்தது.
சேவாக் அவுட்டில் நிறைய பேர் கடுப்பானாலும், சச்சின் இருக்கிறார் காப்பாற்றி விடுவார் என நினைத்துக் கொண்டிருக்கும் போதே 18 ரன்களில் அவரும் வெளியேற ரசிகர்களின் சந்தோசத்தில் இடியே விழுந்தது. நிறைய பேர் டி.வி.யை ஆப் செய்து விட்டு வேலையை பார்க்கத்தொடங்கினர். ஆனால், அப்போது தான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. காம்பீர் மற்றும் கோலி ஜோடி பொறுமையுடன் ரன்களை எடுக்க டி.வி.யை ஆப் செய்தவர்கள் கொஞ்ச நேரம் பாக்கலாம் என ஆன் செய்தார்கள். கோலி 35 ரன்களில் ஆட்டமிழந்தாலும் காம்பீரின் பொறுப்பான ஆட்டம் அனைவருக்கும் நம்பிக்கை தந்தது. கோலிக்கு பின்னர் யுவராஜ் சிங் தான் களத்திற்கு திரும்புவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக களத்திற்குள் வந்தார் தோனி.
எதற்காக தோனி வந்தார், தொடர் முழுவதும் யுவராஜ் சிங் சிறப்பாகவே பேட்டிங் செய்திருந்தார் என்ற பல கேள்விகள் ரசிகர்கள் மனதில் தோன்றினாலும், அதெல்லாம் யோசிக்காதீர்கள் என்னுடைய ஆட்டத்தை மட்டும் பாருங்கள் என அன்று தோனி ஆடிய ஆட்டம் இன்று வரை நம் மனக் கண்களை விட்டு அகலாமல் வந்து செல்லும். அன்று கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த காம்பீர் 97 ரன்களில் ஆட்டமிழந்தது வருத்தமளித்தாலும், இந்தியா வெற்றி இலக்கின் அருகில் வந்தது.
கடைசி 2 ஓவர்களில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில், யுவராஜ் சிங் ஒரு ரன் எடுப்பார். பின்னர் வெற்றிக்கு 4 ரன்கள் தேவை எனும் போது தோனி அடித்த அந்த சிக்ஸ்!... ஆம். உங்கள் கண்ணில் காட்சிகளாய் விரியும் அதே சிக்ஸ் தான்.. குலசேகரா ஓவரில் தோனி "லாங் ஆன்" திசையில் அடித்த வரலாற்று சிக்சரில் இந்தியா 28 வருடங்கள் கழித்து வெற்றிப் பெற்று கோப்பையை கையில் ஏந்தியது. “Dhoni finishes off in style, A magnificent strike into the crowd,India lifts the World Cup after 28 years" என அதிர்ந்த ரவி சாஸ்திரியின் குரலோடு ஸ்டம்புகளை பிடிங்கி கொண்டு ஓடிய இந்திய வீரர்கள் ஒவ்வொருவரின் கண்களிலும் கண்ணீர் துளிகள் ததும்பியிருந்தது.
"சச்சினுக்காக இந்த உலகக் கோப்பையை நிச்சயம் வெல்வோம் என சூளுரைத்த இந்திய வீரர்கள், கோப்பையை வென்றப் பின் சச்சினை தங்களது தோல் மீது சுமந்து மைதானத்தை வலம் வந்தனர். இந்தியாவில் நடந்த அந்த உலகக்கோப்பையை போன்றே தற்போதும் இந்திய அணி தன் சொந்த நாட்டில் கோப்பையை வெல்லுமா என்ற பொறுத்திருந்து பார்ப்போம்!