ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்த நிலையில், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 10 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.
தோனி ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்துவிட்டாரா இல்லையா என்ற குழப்பம் நீண்ட நாள் பலருக்கும் இருந்து. தோனி 10 ஆயிரம் ரன்கள் அடித்தார் என்று என்றைக்கோ செய்திகள் வெளியாகிவிட்டது. ஆனால், 10 ரன்னை எட்ட தோனிக்கு இன்னும் இத்தனை ரன் தேவை என்ற செய்தியும் தொடர்ச்சியாக வெளியானது.
தோனி ஆசிய லெவன் அணிக்காக களமிறங்கி 3 போட்டிகளில் விளையாடி 174 ரன்கள் எடுத்திருந்தார். அதனை கணக்கில் எடுத்தே முன்பு செய்திகள் வெளியாகி இருந்தது. பின்னர், இந்திய அணிக்காக மட்டும் ஒருநாள் போட்டிகளில் அவர் எடுத்த ரன்கள் அடிப்படையில் தற்போது 10 ஆயிரம் ரன்களை அவர் எட்டியுள்ளார்.
இந்திய அளவில் சச்சின், கங்குலி, டிராடிட், விராட் கோலிக்கு அடுத்தபடியாக 5வது வீரராக தோனி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். சர்வதேச அளவில் 12வது வீரர். 330 போட்டிகளில் விளையாடி 9 சதம் மற்றும் 67 அரைசதங்களுடன் அவர் இந்த இலக்கை அடைந்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 49.75 ஆகும். பின் களத்தில் களமிறங்கி 10 ஆயிரம் ரன்களை எட்டியுள்ளது என்பதுதான் தோனியின் பெருமை. நிறைய நேரங்களில் 5, 6, 7 வது இடங்களில் தோனி இறங்கி விளையாடியுள்ளார்.
தோனி கடந்த 20 ஒருநாள் போட்டிகளுக்கு மேல் சரியாக பேட்டிங் செய்யவில்லை. அவரது சமீபத்திய சாராசரியே 25 ஆகத்தான் இருந்தது. ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அதனால், அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து இருந்தது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில், 4 ரன்னில் 3 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில் தோனி அரைசதம் அடித்துள்ளார். இந்திய அணிக்கு மிடில் ஆர்டரில் வலுவான பேட்டிங் தேவைப்படுகிறது. ஏற்கனவே தோனி தான் அந்தப் பணியை செய்து வந்தார். அதனை மீண்டும் அவர் தொடர வேண்டும் என்றே ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.