இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2018ம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கிறது.
இதற்காக சென்னை அணியை வரவேற்கும் விதமாக பல்வேறு மீம்ஸ்களை சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெறிக்கவிட்டு வருகின்றனர். அதில் ஒன்றாக பாகுபலி படத்தில் இடம்பெறும் காட்சி ஒன்றுடன் சென்னை அணி மற்றும் தோனியை ஒப்பிட்டுள்ள வீடியோ வடிவிலான மீம் ஒன்று கவனம் ஈர்த்துள்ளது. மகேந்திர பாகுபலிக்காக அவரது தாய் தேவசேனை காத்திருப்பது போன்ற காட்சி பாகுபலி படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்றிருக்கும். தேவசேனையின் காத்திருப்புக்கு முடிவு நெருங்கிவிட்டது என்பதைக் குறிப்பது போல பல்வாள் தேவன் ஆளுகைக்குக்கீழ் இருக்கும் மகிழ்மதி கோட்டைக்குள், அவரது மகனான பாகுபலி நுழைவது போலவும், அதனை குறிப்பால் உணர்ந்துகொண்ட தேவசேனை, மகிழ்மதியே உயிர்த்தெழு என்று தொடங்கும் வசனத்தைப் பேசுவது போலவும் இயக்குனர் ராஜமௌலி காட்சி ஒன்றினை அமைத்திருப்பார். அதில், தேவசேனை கதாபாத்திரத்தை சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் ரசிகர்களாகவும், மகிழ்மதியின் கோட்டையை சேப்பாக்கம் மைதானத்துடனும் ஒப்பிட்டுள்ள ரசிகர்கள், மகேந்திர பாகுபலியை கேப்டன் கூல் தோனியுடன் ஒப்பிடுவதாக அந்த வீடியோ காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவேகமாக பகிரப்பட்டு வருகிறது.