விளையாட்டு

டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டனாக தொடர்கிறார் ரிஷப் பன்ட் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டனாக தொடர்கிறார் ரிஷப் பன்ட் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

jagadeesh

அமீரகத்தில் தொடர இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பன்ட் தொடர்வார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டு, இப்போது மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இந்தியாவில் 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் மீதமிருக்கும் போட்டிகள் அமீரகத்தில் இருக்கும் அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜா மைதானங்களில் நடைபெற இருக்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் 30-ஆவது ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை - சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன.

ஏற்கெனவே இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடருக்கு முன்பாக கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்தவர் ஸ்ரேயாஸ் ஐயர். ஆனால் அவர் காயமடைந்ததால் ரிஷப் பன்ட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து ரிஷப் பன்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி சிறப்பாகவே செயல்பட்டது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 6-இல் வெற்றிப்பெற்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது டெல்லி அணி. டெல்லிக்கு இன்னும் 6 லீக் போட்டிகள் பாக்கியிருக்கிருக்கும் நிலையில் அந்த அணி இன்னும் 2 போட்டிகளில் வெற்றிப் பெற்றுவிட்டால் "ப்ளே ஆஃப்" சுற்றுக்கு எளிதாக தகுதிப்பெற்றுவிடும்.

இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தில் இருந்து குணமடைந்து அணிக்கு திரும்பியதால் கேப்டன் பதவி யாருக்கு கொடுப்பது என்ற குழப்பம் ஏற்பட்டது. இப்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் தொடர இருக்கும் ஐபிஎல்லின் எஞ்சியப் போட்டிகளுக்கும் ரிஷப் பன்ட் கேப்டனாக தொடர்வார் என்று முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது.