சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் பல மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள் என்று அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் எல்.பாலாஜி கூறினார்.
பதினோறாவது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி மும்பையில் இன்று நடக்கிறது. இதில் சிஎஸ்கேவும் ஐதராபாத் அணியும் மோதுகின்றன. இன்று இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டி பற்றி, சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் எல்.பாலாஜி கூறும்போது, ’ பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிஎஸ்கே அணியில் பல மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள்’ என்றார்.
’இதற்கு முன்னால் சென்னை அணியின் ஹைடன், மைக் ஹஸி, முரளிதரன் போன்ற மேட்ச் வின்னர்கள் இருந்தார்கள். இப்போது தோனி, ரெய்னா, டுபிளிசிஸ், ராயுடு, வாட்சன், பிராவோ, ஹர்பஜன், நிகிடி உட்பட பலர் இருக்கிறார்கள். இதில் யார் வேண்டுமானாலும் போட்டியை வெற்றிகரமாக முடிக்கலாம். அதோடு தோனி தவிர, சில கேப்டன்களும் இந்த அணியில் இருக்கிறார்கள். வாட்சன், பிராவோ, டுபிளிசிஸ் ஆகியோர் தங்கள் அனுபவங்களை இளம் வீரர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். பீல்டுக்குள் தோனி, போட்டியை சரியாக கணிப்பவராக இருக்கிறார். அதற்கு தகுந்தாற்போல் வீரர்களை பயன்படுத்துகிறார்.
அதோடு அவரது பீல்டிங் செட்டப்பும் அருமையாக இருக்கிறது. நான் விளையாடியபோது டெத் ஓவர்களில் தோனி என்னிடம் ஏதும் பேசிய ஞாபகம் இல்லை. அவர் சில விஷயங்களைக் குறிப்பிடுவார். மற்றபடி பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தத்தைக் கொடுக்க மாட்டார். அணியில் உள்ளவர்கள் எல்லோரும் குடும்பமாக இருப்பது பலம். அனைத்து வீரர்களையும் ஒரே மாதிரிதான் தோனி நடத்துவார்’ என்றார் எல்.பாலாஜி.