போட்டி 9: இந்தியா vs ஆப்கானிஸ்தான்
மைதானம்: ஃபெரோஷ் ஷா கோட்லா,Arun Jaitley Stadium, டெல்லி
மைதானம்: ஃபெரோஷ் ஷா கோட்லா, டெல்லி
இந்தியா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா. 200 என்ற இலக்கை சேஸ் செய்த அணி 2 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்தது. இருந்தாலும் கோலி - ராகுல் பார்ட்னர்ஷிப்பால் மீண்டு வந்து வெற்றி பெற்றது இந்தியா.
ஆப்கானிஸ்தான்: தங்கள் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வங்கதேசத்துக்கு எதிராக படுதோல்வி அடைந்தது. 156 ரன்கள் மட்டுமே எடுத்த ஆப்கானிஸ்தான், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அந்த ஆட்டத்தை இழந்தது.
இந்தப் போட்டி நடக்கும் ஃபெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் ரன் மழை பொழியும். தென்னாப்பிரிக்க அணி இந்த மைதானத்தில் 428 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. இந்தப் போட்டியிலும் ஃபோர்களும், சிக்ஸர்களும் பறக்கவே வாய்ப்பு அதிகம். ஸ்பின், வேகம் என அனைத்து வகையான பௌலர்களும் தடுமாறவே செய்வார்கள்.
முதல் போட்டியில் பேட்டிங்கில் கொஞ்சம் சறுக்கினாலும் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டது. ஆஸ்திரேலியா போன்ற ஒரு மிகப் பெரிய அணியை வீழ்த்தியது அணிக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தும். அதே நம்பிக்கையோடு இந்தப் போட்டியை எதிர்கொள்ளவிருக்கும் இந்திய அணிக்கு முன் ஒருசில கேள்விகளும் இருக்கிறது. இந்திய அணியின் முதல் போட்டி சென்னையில் நடந்தது என்பதால் ரவிச்சந்திரன் அஷ்வின் பிளேயிங் லெவனில் இடம்பிடித்தார். அந்தப் போட்டியில் அவர் சிறப்பாகவே செயல்பட்டிருந்தாலும், இந்தப் போட்டி நடக்கும் மைதானம் ஸ்பின்னுக்கு சாதகமாக இருக்காது என்பதால், அஷ்வின் தன்னுடைய இடத்தை இழக்க நேரலாம். ஏற்கெனவே குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா என இரு ஸ்பின்னர்கள் உறுதியாக ஆடுவார்கள் என்பதால் ஷர்துல் தாக்கூர் பிளேயிங் லெவனில் இடம்பெறும் வாய்ப்பு அதிகம்.
இதுபற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா, "ஒரு அணியாக நாங்கள் இதுபோன்ற முடிவுகள் எடுக்கத் தயாராகவே இருக்கிறோம். சூழ்நிலைகளுக்கு ஏற்ற வீரர்கள் அந்தப் போட்டியில் வந்து நமக்கு பங்களிக்கவேண்டும் என்பதுபற்றி நாங்கள் சமீபமாக நிறைய விவாதித்திருக்கிறோம்" என்று கூறினார்.
அதேபோல் சூர்யகுமார் யாதவுக்கு இந்தப் போட்டியில் வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்ற வாதமும் எழுந்து வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் நன்றாக ஆடியிருந்தார். அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் உலகக் கோப்பை போட்டியில் டக் அவுட் ஆனார் ஷ்ரேயாஸ் ஐயர். அதனால் சூர்யாவுக்கான ஆதரவு அதிகரித்திருக்கிறது. ஆனால் ஆப்கானிஸ்தான் போன்ற ஒரு அணிக்கெதிராக ஷ்ரேயாஸ் ஆடுவதுதான் சரியான முடிவாக இருக்கும். ஸ்பின்னை எதிர்த்து சிறப்பாக ஆடக்கூடிய ஷ்ரேயாஸ், ஸ்பின்னர்களை நம்பிக் களமிறங்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நல்ல தேர்வாக இருப்பார்.
டெங்கு காய்ச்சல் காரணமாக முதல் போட்டியில் பங்கேற்காமல் இருந்த இந்திய ஓப்பனர் சுப்மன் கில் இந்தப் போட்டியிலும் விளையாடமாட்டார். அவர் உடல்நிலை தேராத நிலையில் அவர் சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு திரும்பியிருக்கிறார். அதனால் இஷன் கிஷன் இந்தப் போட்டியில் தொடக்க வீரராக விளையாடுவார்.
ஆப்கானிஸ்தான் அணி திறமையான வீரர்கள் நிறைந்தவொரு அணியாக அறியப்பட்டாலும் உலகக் கோப்பை அரங்கில் தடுமாறுகிறது. 2015 முதல் ஆடிவரும் அந்த அணி 16 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே (2015ல் ஸ்காட்லாந்துக்கு எதிராக) வென்றிருக்கிறது. மற்றபடி அவர்களின் செயல்பாடு சொல்லிக்கொள்ளும்படி இருந்ததில்லை. இந்த உலகக் கோப்பையில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு முன்பாக நேரடியாக தகுதி பெற்ற ஒரு அணி இன்னும் சிறப்பாகச் செயல்படவேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். தரமான சுழல் கூட்டணி இருந்தாலும், வேகப்பந்துவீச்சு, பேட்டிங் அனைத்தும் அந்த அணிக்குக் கைகொடுக்கவேண்டும். ஒருவேளை, இந்த மைதானம் அவர்களின் பேட்ஸ்மேன்கள் ஒரு நல்ல செயல்பாட்டை வெளிப்படுத்துவதற்கு உதவலாம்.
இந்தியா - ரோஹித் ஷர்மா: ஒரு அணியின் மூன்று வீரர்கள் ஒரேபோட்டியில் சதம் அடித்த மைதானத்தில் ரோஹித் ஷர்மா விளையாடுகிறார் என்றால், அங்கு இரட்டை சதத்துக்குக் கூட வாய்ப்பு இருக்கலாம் அல்லவா!
ஆப்கானிஸ்தான் - ரஷீத் கான்: பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் கடினமான ஒரு ஆடுகளத்தில், இந்தியா போன்ற ஒரு பேட்டிங் யூனிட்டை எதிர்த்து களமிறங்கும்போது ரஷீத் கானை தவிரு வேறு யார் மாற்றம் ஏற்படுத்த முடியும்!