virat pt web
கிரிக்கெட்

என்ன இது வைட் இல்லையா? ஒருவேளை அவரும் ரசிகரா இருப்பாரோ! விராட் கோலி சதம் அடிக்க உதவினாரா அம்பயர்!

உலகக் கோப்பைத் தொடரில் பங்களாதேஷூக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் விராட் கோலிக்கு வீசப்பட்ட பந்து வைடா இல்லையா என்ற விவாதம் எழுந்துள்ளது.

Angeshwar G

மகாராஷ்ட்ர மாநிலம் புனே நகரில் நடைபெற்ற போட்டியில் 257 ரன்களை இலக்காகக் கொண்டு களம் கண்ட இந்திய அணி 41 புள்ளி 3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 261 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் விராட் கோலி சிறப்பாக விளையாடி 97 பந்துகளில் 103 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 4 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் அடக்கம். சுப்மன் கில் 53 ரன்களையும், ரோகித் சர்மா 48 ரன்களையும் எடுத்தனர். முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரை சதம் அடித்தனர். இந்திய அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். சிறப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற விராட் கோலி ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த போட்டியில் 41 ஆவது ஓவரின் முடிவில் விராட் 97 ரன்களிலும் கே.எல்.ராகுல் 34 ரன்களிலும் ஆடிக்கொண்டிருந்தனர். இந்திய அணியின் ஸ்கோர் 255 ஆக இருந்தது. இந்திய அணி வெற்றி பெற இன்னும் 2 ரன்களே தேவை எனும் நிலை இருந்தது.

இந்நிலையில் வங்காளதேசத்தின் நசீம் அஹமது தான் வீசிய 42 ஆவது ஓவரின் முதல் பந்தை லெக் சைடில் வீச விராட் தனது கால்களை நகட்டி பந்தை பின்னால் விட்டார். அந்த பந்திற்கு நடுவர் வைட் என அறிவிக்கவில்லை. இது சமூக வலைதளங்களில் விவதத்திற்கு உள்ளானது.

கடந்தாண்டு வெளியான ஐசிசி விதிகளின்படி, பந்துவீச்சாளர் ரன் அப்பில் இருக்கும் போது பேட்ஸ்மேன் இருக்கும் இடத்தில் இருந்து பந்து பேட்ஸ்மேனைக் கடக்கும் போது அவர் இடம் மாறி பந்து வைடாக சென்றால் அது அம்பயர்ஸ் கால் என அழைக்கப்படும். அதை வைடாகோ அல்லது வைட் இல்லை என்றோ களத்தில் இருக்குக் நடுவர் முடிவு செய்யலாம். அந்த வகையில் அம்பயர் வைட் கொடுக்காதது தவறில்லை என கூறப்படுகிறது. உலகக் கோப்பை போட்டியில் பந்துவீச்சாளர் பந்தை வைடாக வீசி அதை அம்பயர் வைட் என அறிவிக்காமல் இருந்தும் அது குறித்து பேட்டிங் செய்யும் அணி ஏதும் சொல்லாதது உலகக்கோப்பையில் விநோத நிகழ்வாக பதிவானது. நடுவர் கூடு விராட் கோலி சதத்தை தவரவிடுவதை விரும்பவில்லை என்று பலரும் சோஷியல் மீடியாவில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

அதேபோல், மற்றொரு இக்கட்டான சூழலில் மற்றொரு நடுவர் இதேபோன்று நடந்து கொண்டால் அது ஆட்டத்தின் தன்மையையே பாதித்துவிடும். மிகவும் தெளிவாக வைட் கொடுக்க வேண்டிய தருணத்தில் இப்படி செய்வது நம்பகத்தன்மையை குறைத்துவிடும்.