லண்டனில் நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடைசி நாளான இன்று இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 280 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ளன. விராட் கோலி 44 ரன்னிலும் ரஹானே 20 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்திய நேரப்படி இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் இரவு 10.30 மணி வரை நடைபெறும்.
கடைசி நாள் ஆட்டம் யார் பக்கம் மாறும் என்று கணிக்க முடியாத பரபரப்பான சூழலில், போட்டி நடைபெறும் ஓவல் மைதானம் அமைந்துள்ள கென்சிங்டன் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மழை பெய்ய 90 சதவீதம் வாய்ப்புள்ளதாக அக்யூவெதர் வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் ஓவல் மைதானத்தில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு 36 சதவீதம் வாய்ப்பு உள்ளதாகவும், இன்றைய தினம் நகரில் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பிற்பகலில் மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும் எனவும் மாலை மற்றும் இரவில்தான் மழை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்று போட்டிக்கு நடுவே மழை குறுக்கிட வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.
மழையால் போட்டி பாதிக்கபட்டால் என்ன நடக்கும்?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 6வது நாள் ரிசர்வ் நாளாக இருக்கிறது. அதனால் இன்று மழை காரணமாக போட்டி பாதிக்கப்பட்டால், இழந்த நேரத்தை ஈடுசெய்ய இந்த 6வது நாளில் போட்டி நடக்கும். அதுவும் முழு நாளும் போட்டி நடக்காது. உதாரணத்திற்கு இன்று 2 மணி நேரம் போட்டி மழையால் தாமதமாகிறது என்றால், அந்த 2 மணி நேரம் மட்டும் நாளை ரிசர்வ் நாளில் போட்டி நடக்கும். மழை அல்லது போதிய வெளிச்சமில்லை எனப் போட்டி பாதிக்கப்பட்டால் ரிசர்வ் நாள் பயன்படுத்தப்படும். மழையால் ஒரு மணி நேரம் வரை ஆட்டம் பாதிக்கப்பட்டால் மட்டுமே ரிசர்வ் டே பயன்படுத்தப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.
ஒருவேளை ரிசர்வ் நாள் அன்றும் போட்டி நடைபெறுவதற்கான சூழல் இல்லாமல் இருந்து கைவிடப்பட்டால், இரு அணிகளுக்குமே கோப்பை பகிர்ந்து அளிக்கப்படும். அதேபோல் போட்டி டிராவில் முடிந்தாலும்கூட இரு அணிகளும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.