இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ, 19 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான கூச் பெஹர் டிராபி என்ற 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை நடத்திவருகிறது. இந்த தொடரில் டெல்லி அணிக்காக விளையாடிய விரேந்தர் சேவாக்கின் மகன் ஆர்யவிர் சேவாக் 297 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.
டெல்லி மற்றும் மேகாலயாவுக்கு எதிரான போட்டி நேற்று நடைபெற்றது, அதில் முதலில் விளையாடிய மேகாலயா அணி முதல் இன்னிங்ஸில் 260 ரன்கள் அடித்தது. அதனைத்தொடர்ந்து விளையாடிய டெல்லி அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஆர்யவிர் சேவாக் 51 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என துவம்சம் செய்து 309 பந்தில் 297 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
முச்சதமடிக்கும் வாய்ப்பை ஆர்யவிர் இழந்தாலும் தன் தந்தையின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோரான 319 ரன்களை கிட்டத்தட்ட எட்டினார். இதனை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சேவாக் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து ஸ்பெசல் வாழ்த்தை பகிர்ந்துள்ளார்.
ஆர்யவிர் அதிரடி பேட்டிங் காரணமாக டெல்லி அணி 600 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது. தந்தையை போல் தொடக்கவீரராக அதிரடியாக விளையாடியிருக்கும் ஆர்யவீருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு மழை பொழிந்து வருகிறது.
இந்நிலையில் தன் மகனுக்காக வாழ்த்தை பகிர்ந்திருக்கும் சேவாக், “சிறப்பாக விளையாடினாய் ஆர்யவிர் சேவாக். 23 ரன்கள் வித்தியாசத்தில் ஃபெராரியை இழந்துவிட்டாய் (319 ரன்களை குறிப்பிட்டு). ஆனால், சிறப்பான ஆட்டம். இந்த நெருப்பை அணையாது வைத்திரு. அப்பாவின் பெரிய சதங்கள், இரட்டை, முச்சதங்கள் அனைத்தையும் அடிப்பாய், விளையாடு போ!” என்று அப்பாவிற்குரிய பெருமிதத்தோடு வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.