2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. சமபலம் கொண்ட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் கோப்பையை வெல்வதற்காக பலப்பரீட்சை நடத்திவருகின்றன.
பரபரப்பான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் இந்திய அணியை பேட்டிங் செய்யுமாறு அழைத்தார். டாஸை இழந்த பிறகு பேசிய இந்திய கேப்டன் ரோகித் சர்மாவும் “நாங்களும் முதலில் பேட்டிங் தான் செய்ய நினைத்தோம்” எனக்கூறியதால் இரண்டு அணிகளும் அவரவர்களின் திட்டத்தின் படியே போட்டிக்குள் சென்றதால், ஒரு விறுவிறுப்பான போட்டியாக இருக்கும் என தொடங்கப்பட்டது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா எப்போதும் போல அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். என்ன தான் ரோகித் அதிரடியாக ஆடினாலும் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசிய ஆஸ்திரேலிய பவுலர்கள் இந்திய வீரர்களை இழுத்துப்பிடித்தனர். இறுதிப்போட்டியின் அழுத்தத்தை இந்திய ஓப்பனர்கள் மீது செலுத்திய ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு, ஃபீல்டிங்கில் பறந்த பந்துகளை எல்லாம் தாவிதாவிப்பிடித்த ஆஸ்திரேலிய ஃபீல்டர்கள் உறுதுணையாக செயல்பட அழுத்தம் மேலும் மேலும் இந்திய அணி மீது கூடியது. அழுத்தம் கூட அடித்து ஆட முயன்ற சுப்மன் கில் கைக்கே கேட்ச் கொடுத்து வெளியேற, அடுத்து கைக்கோர்த்த ரோகித் மற்றும் கோலி இருவரும் அணிக்காக போராடினர்.
அடுத்தடுத்து 3 சிக்சர்களை பறக்கவிட்ட கேப்டன் ரோகித் சர்மா பிரஸ்ஸரை ரிலீஸ் செய்துவிட, அடுத்தடுத்து பவுண்டரிகளாக விரட்டி கோலி ரன்களை எடுத்துவந்தார். முதல் பத்து ஓவர்களில் இந்த கூட்டணி 80 ரன்களை எடுத்துவந்தது. ஆனால் மேக்ஸ்வெல் ஓவரில் கேப்டன் ரோகித் வெளியேற, உடன் களத்திற்கு வந்த ஸ்ரேயாஸ் ஐயரும் 4 ரன்னில் நடையை கட்டினார். அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி இந்தியாவை கலக்கிப்போட, அணியை மீட்டு எடுத்துவரும் பொறுப்பு விராட் கோலியின் தோள்களில் சேர்ந்தது.
மிடில் ஓவரில் பொறுப்பாக செயல்பட்ட கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பவுண்டரிகளை எடுத்துவர முடியவில்லை என்றாலும் களத்தில் ரன்களை ஓடியே எடுத்த இந்த ஜோடி ரன்களை எடுத்துவந்தது. 4 பவுண்டரிகளை விரட்டிய கிங் கோலி நடப்பு உலகக்கோப்பையில் 6வது அரைசதத்தை பதிவுசெய்தார். அரைசதம் அடித்துவிட்டார் இனி கோலி ரன்களை எடுத்துவருவார் என நினைத்த போது, பாட் கம்மின்ஸ் வீசிய பந்தில் இன்சைட் எட்ஜ் பட்டு கோலி போல்டாகி வெளியேறினார். பின்னர் கடைசிவரை போராடிய கேஎல் ராகுல் 66 ரன்கள் அடித்து வெளியேற, மற்ற எந்த இந்திய வீரர்களாலும் ஆஸ்திரேலிய அணியின் தரமான பந்துவீச்சுக்கு எதிராக சோபிக்க முடியவில்லை. 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 240 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இந்திய அணி கோப்பை வெல்ல வேண்டுமானால் ஆஸ்திரேலியாவை 240 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும்.
இந்தப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட விராட் கோலி, இந்த ஒரே போட்டியில் 4 சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார். அவை..,
* 765 ரன்கள்: ஒரு உலகக்கோப்பையில் அதிக ரன்களை பதிவுசெய்த ஒரே வீரராக விராட் கோலி மாறியுள்ளார். 765 ரன்களை குவித்து முதலிடத்தில் இருக்கும் கோலிக்கும், இரண்டாவது இடத்தில் இடத்தில் இருக்கும் சச்சினுக்கும் (673 ரன்கள்) 102 ரன்கள் வித்தியாசம் உள்ளது.
* 9 அரைசதங்கள் : ஒரு உலகக்கோப்பையில் அதிக (9) அரைசதங்கள் அடித்த வீரராக விராட் கோலி சாதனை படைத்துள்ளார். 11 போட்டிகளில் 9 போட்டிகளில் அரைசதமடித்து அசத்தியுள்ளார்.
* 3-ல் 2 முறை அதிக அரைசதங்கள்: விராட் கோலி இந்த உலகக்கோப்பையில் 5க்கும் மேற்பட்ட அரைசதங்களை பதிவுசெய்துள்ள நிலையில், 2 உலகக்கோப்பையில் 2 முறை 5க்கும் மேற்பட்ட அரைசதங்கள் பதிவுசெய்த வீரராக மாறியுள்ளார். மொத்தமாக 3 முறை மட்டுமே உலகக்கோப்பை தொடர்களில் இது நிகழ்ந்துள்ள நிலையில், விராட் கோலி மட்டுமே 2 முறை 5-க்கும் மேற்பட்ட அரைசதங்களை அடித்துள்ளார்.
* இரண்டாவது சிறந்த 95.62 சராசரி: ஒரு உலகக்கோப்பையில் 500 ரன்களுக்கு மேல் அடித்து சிறந்த சராசரி வைத்திருக்கும் வீரர்களில் 95.62 சராசரியுடம் சிறந்த இரண்டாவது வீரராக விராட் கோலி அசத்தியுள்ளார்.