2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தங்களுடைய முதல் போட்டியில் இன்று பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இரண்டு சமபலம் கொண்ட அணிகளுக்கு இடையேயான போட்டி என்பதால் விறுவிறுப்பான போட்டியாக நடந்துவருகிறது.
சென்னையில் நடைபெற்றுவரும் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்திலேயே மென் இன் ஃபார்மில் இருக்கும் மிட்சல் மார்ஸை 0 ரன்னில் வெளியேற்றிய ஜஸ்பிரித் பும்ரா, இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். 5 ரன்னுக்கே முதல் விக்கெட்டை இழந்தாலும் அதற்கு பிறகு கைக்கோர்த்த டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அடிக்க வேண்டிய பந்துகளை மட்டும் அட்டாக் செய்த இவர்கள், இந்திய வேகப்பந்துவீச்சாளர்களை செட்டில் ஆக விடாமல் சிறப்பாக விளையாடினர்.
நிலைத்து நின்ற பிறகு அடுத்தடுத்து பவுண்டரிகளாக விரட்ட ஆரம்பித்த இந்த ஜோடி, 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு ஆஸ்திரேலியாவை சரியாக பாதைக்கு அழைத்து சென்றது. தொடர்ந்து பந்துவீச வந்த குல்தீப் யாதவ் ஒருவழியாக 41 ரன்களில் டேவிட் வார்னரை வெளியேற்றி வெற்றிகரமாக தெரிந்த ஜோடியை பிரித்துவைத்தார். என்னதான் விக்கெட்டுகள் விழுந்தாலும் 3வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த ஸ்மித் மற்றும் லபுசனே இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப் போட்டு விளையாடினார்கள். பின்னர் பந்துவீச வந்த ஜடேஜா ஒரு மாயாஜால பந்தில் ஸ்மித்தின் ஸ்டம்பை தகர்த்தார். அடுத்தடுத்து லபுசனே, அலக்ஸ் கேரி என இருவரையும் ஒரே ஓவரில் வெளியேற்றிய ஜட்டு ஆஸ்திரேலியாவை கட்டுக்குள் கொண்டுவந்தார். முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா 199 ரன்கள் மட்டுமே எடுத்தது.
200 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு பெரிய அதிர்ச்சியை வைத்திருந்தனர் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள். முதல் ஓவரிலேயே இஷான் கிஷானை டக் அவுட்டில் ஸ்டார்க் வெளியேற்ற, அடுத்த ஓவரில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரையும் அடுத்தடுத்து 0 ரன்களில் வெளியேற்றி அசத்தினார் ஹசல்வுட். 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு மோசமான சாதனையை பதிவுசெய்தது.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் 3 பேரும் 0 ரன்னில் வெளியேறுவது இதுவே முதல்முறையாகும். அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பையிலும் இதுவே முதல்முறை. ஏற்கனவே 1983 உலகக்கோப்பையில் ஓபனர்களான சுனில் கவாஸ்கர் மற்றும் கிருஷ்னமாச்சாரி ஸ்ரீகாந்த் இருவரும் டக் அவுட்டாகி இருந்தனர். ஜிம்பாப்வேக்கு எதிரான அந்த போட்டியின் முடிவில் இந்திய அணியே வெற்றிப்பெற்றிருந்தது.
அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இந்தியா விரைவாகவே இழந்தாலும் சேஸ் மாஸ்டரான விராட் கோலி நிலைத்து நின்று ஆடினர். 116 பந்துகளில் 6 பவுண்டரிகள் விளாசி 85 ரன்கள் எடுத்தார் விராட் கோலி, ஐசிசி தொடர்களில் அதிக ரன்களை எடுத்த இந்திய வீரராக மாறியுள்ளார். ஏற்கனவே ஐசிசி தொடர்களில் 2785 ரன்களை (58 போட்டிகள்) குவித்திருந்த சச்சின் டெண்டுல்கர், அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார்.
தற்போது 2720* ரன்களை (64 போட்டிகள்) கடந்துள்ள விராட் கோலி சச்சினை பின்னுக்கு தள்ளி, ஐசிசி உலகக்கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் குவித்த வீரராக விராட் கோலி மாறியுள்ளார். இந்த பட்டியலில் அடுத்த இடத்தில் ரோகித் சர்மா 2422 ரன்களுடன் (64 போட்டிகள்) மூன்றாவது வீரராக நீடிக்கிறார். இதில் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் சேர்க்கப்படாது.
அதேபோல், ரன் சேஸ் செய்து வெற்றி பெற்ற போட்டிகளில் சச்சின் அடித்த ரன்களே இந்திய அளவில் முன்னணியில் இருந்தது. 124 இன்னிங்ஸ்களில் 5,490 ரன்களுடன் முதலிடத்தில் இருந்த அவரை பின்னுக்கு தள்ளி 92 இன்னிங்ஸ்களில் 5,517 ரன்கள் குவித்து முன்னிலைக்கு வந்துள்ளார். ரன் சேஸில் அவரது ரன் ரேட் சராசரி 88.98.
கே.எல்.ராகுல், விராட் கோலி இணை நங்கூரம் போல் நிலைத்து நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றது. இந்திய அணி 41.2 ஓவர்களில் 201 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கே.எல்.ராகுல் 97 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே வெற்றிபெற்று அசத்தியுள்ளது.